சென்னை,
மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகளை களைவதற்கான காலாண்டுக் கூட்டம் திங்களன்று (ஆக. 20) சென்னை எழிலகத்தில் உள்ள மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்யகோபால் தலைமை தாங்கினார்.  சமூகப்பாதுகாப்புத் திட்டங்களுக்கான மாநில ஆணையர் அதுல் ஆனந்த், மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் வி. அருண்ராய் மற்றும் தேசிய இன்பர்மேடிக்ஸ் சென்டர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் எஸ்.நம்புராஜன், பேரா.டி.எம்.என். தீபக், பி.மனோகரன், கே.ஜமால் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  மாநிலம் முழுவதும் நிலவும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் இக்கூட்டத்தில் எழுப்பப்பட்டன. குறிப்பாக சமூகப்பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதில் கீழ்மட்ட அலுவலகங்களில் நிலவும் பல்வேறு முறைகேடுகள், 40 சதவீத ஊனமுற்ற அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்ட அரசாணை 41 அமலாகாதது,  வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவுகளின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குறைதீர் கூட்டங்கள் நடக்காதது உள்ளிட்டவைகளை மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் எடுத்துக் கூறினர்.

அப்போது பேசிய தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்யகோபால், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப்பாதுகாப்புத் திட்ட உதவித்தொகைகள் வழங்குவதில் மாநிலம் முழுவதும் கீழ்மட்ட அலுவலகங்களில் நிகழும் முறைகேடுகளை களைய தமது அலுவலகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். சமூகப்பாதுகாப்புத் திட்ட உதவித் தொகைகளை வழங்குவதை முறைப்படுத்த ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான பணிகளை தமது அலுவலகத்தில் ஏற்கெனவே துவக்கிவிட்டதாக தெரிவித்த அவர், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதன் மூலம், அந்த விண்ணப்ப படிவத்தின் மீது அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் அவ்வப்போது அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுடைய விண்ணப்பங்களை நிராகரிக்கும் அதிகாரம் மாவட்டத்தில் உள்ள சமூகப்பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியருக்கு இருக்கும்படியாக மாற்றி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.