ஈரோடு,
வீட்டுமனை வழங்க மறுத்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையத்தில், குடிசைமாற்று வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வீடுகளை உடனேவழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை, பிற உதவித் தொகைகளை உடனே சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் தலைமையில் திங்களன்று 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் சமாதானமாக மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். இதையடுத்து மனு நீதி முகாமில் மனு வாங்கிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலகர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர்பிரபாகர், நீங்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. மனுக்கள் கொடுத்த உடனே தீர்வு காண முடியாது. மனுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும். மேலும், நீங்கள் ஒரே இடத்தில் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இரு பிரிவுகளாக கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர் என்றார்.

அப்போது குறுக்கிட்ட மாற்றுத்திறனாளிகள், தவறான தகவல் தெரிவிக்காதீங்க. எங்கு இடம் கொடுத்தாலும் நாங்கள் செல்கிறோம். தமிழகத்தில் திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் படுமோசமாக நடக்கிறது. தவறான புள்ளி விவரத்தை தெரிவிக்காதீர்கள் என ஆவேசமாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 540 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 456 வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 10 சதவீதம்முன்னான் ராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் தற்போது மனு அழித்துள்ளீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார். இதனை மறுத்த மாற்றுத்திறனாளிகள் மொடக்குறிச்சி அருகே தூரப்பாளையத்தில் முதலில் நிலம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எழுமாத்தூர் காகம் ஊராட்சியில் ஆக.15ல் தருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கொடுக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு வாடகைக்கு வீடுகள் கொடுக்கக்கூட மறுக்கப்படுகிறது என்று கூறினார்கள். அப்போது ஆட்சியர் பிராபகர், தூரத்தில் நிலம் கொடுத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள் என்பதால், மாநகருக்கு அருகில் நிலம் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது என தெரிவித்தார். இவ்வாறு ஆட்சியருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே அரை மணிநேரத்திற்கும் மேல் கடும் வாக்குவாதம் நடந்தது. இதன்பின் அலுவலகத்திற்குள் சென்ற ஆட்சியர், 15 நிமிடம் கழித்து மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சை ஊத்துக்குளியில் 82 நபர்களுக்கு செப்.15 ஆம்தேதி பட்டா வழங்கப்படும். இந்தநிதியாண்டுக்கான பசுமை வீடுகள் அனைத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதம் அவை ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

You must be logged in to post a comment.