காந்தி நகர்;
குஜராத்திலுள்ள ‘பட்டிதார்’ மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். 25 வயது இளைஞரான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியபோது, பாஜக அரசு கடும் அடக்குமுறைகளை ஏவி விட்டது. ஹர்திக் மீது பொய்வழக்கு போட்டு சிறையிலும் அடைத்தது. எனினும் படேல் தொடர்ந்து போராடி வருகிறார்.

தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ள ஹர்திக் படேல், இதற்காக அகமதாபாத்தின் நிகோல் நகரில் இடம்கேட்டு காவல்துறைக்கு மனு அளித்திருந்தார். ஆனால், காவல்துறை உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்து விட்டது.

இதையடுத்து, குஜராத் பாஜக முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ஹர்திக் படேல், “உண்ணாவிரதம் நடத்துவது எனது அரசியலமைப்பு உரிமை; இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கியாக வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹர்திக் படேலுக்கு ஆதரவாக இந்த உண்ணாவிரதத்தில் வேறுபல அமைப்பினரும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.