திருப்பூர்,
திருப்பூர் ராயபுரம் அருகே கல்லம்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்ட அதே நிறுவனத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல் கண்டுகள் சேதமடைந்தது.

திருப்பூர் கல்லம்பாளையத்தில் ஜெயப்பிரகாஷ், முத்துசாமி ஆகிய இருவர் கூட்டாகச் சேர்ந்து பின்னலாடை நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த மார்ச் 10ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 நிட்டிங் இயந்திரங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்திற்கு இழப்பீட்டுத் தொகை கோரி நிறுவன உரிமையாளர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் மனு அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மதியம் அதே நிறுவனத்தில் நூல் கண்டுகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான நூல் கண்டுகள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இரு வாகனங்களில் அங்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஏற்கெனவே தீ விபத்து ஏற்பட்ட அதே நிறுவனத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: