திருப்பூர்:
மருதுறையில் நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நொய்யல் ஆறு திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறையை கடந்து செல்லும் இடத்தில் தாழ்வான தரைப்பாலம் அமைந்துள்ளது. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள இந்த பாலத்தைக் கடந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பெருந்துறை, அரச்சலூர் பகுதிக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அதிக அளவு மழைநீர் வெள்ளமாகச் செல்கிறது. வழக்கமாக நொய்யல் ஆற்றில் வரும் நீர் திருப்பூர் வழியாக சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேர்கிறது. அங்கு தண்ணீர் தடுத்து தேக்கி வைக்கப்படும். ஆனால் நொய்யல் ஆற்றில் திடீரென்று மழைநீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்படி ஞாயிறன்று காலை 8 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது, மாலை 4 மணிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயக்கழிவு மற்றும் ஆற்றின் இருபுறமும் மாநகர, நகர, ஊராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் நீரும் சேர்ந்து அதிக அளவில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இந்நிலையில் மருதுறையில் நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை தொடரும்பட்சத்தில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மருதுறை தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு செல்லக்கூடும் என்ற ஆபத்து உள்ளது. எனவே ஞாயிறன்று காலை முதல் இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.