சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டுறவு தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சிஐடியு செங்கொடி சங்கத்தினர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் நிறைவடைந்தது. தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையை அனுசரித்து 18 ஆயிரத்து 775 கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்து இருந்தது.

அதனடிப்படையில் சமீபத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் தேர்தலில் பங்கேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெற்றது. இந்தசூழலில், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அண்மையில் தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம், அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் நடந்தது. இரு சங்கங்களுக்கும் தலா 11 இயக்குநர்களுக்கான தேர்தல் நடந்தது. தொழிலாளர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தலில் 2500க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். இதேபோல், அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தலில் 2,613 பேர் தங்களது வாக்குகளை அளித்தனர். தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டாலும் பல இடங்களில் ஆளும் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் கள்ளவாக்குகள் போட முயற்சித்தனர். சிந்தாதரிப்பேட்டையில் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பெட்டியினுள் கருப்பு மை, தண்ணீர் ஊற்றி அராஜக செயல்களில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களின் ஜனநாயகவிரோத செயல்களால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை பெற்றனர்.

ஆளுங்கட்சினரின் அத்துமீறல்களையும் மீறி செங்கொடி சங்கத்தினர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பண்டக சாலையில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு பண்டகசாலை மூலம் தரமான உபகரணங்கள், சிக்கன நாணய கடன் சங்கம் மூலம் பணப்பயன்கள் பெற்றுத்தர முடியும். ஏற்கனவே 150 கோடி ரூபாய்க்கு பணப்பயன்கள் பெற்றுத்தந்துள்ளதாகவும் தொழிலாளர்களுக்கு உரிய பயன்கள் கிடைக்க இயன்ற வகையில் போராடவும், பணிசெய்யவும் முடியும் என செங்கொடிச்சங்க பொதுச்செயலாளர் சீனிவாசலு பெருமையுடன் கூறினார். மேலும் வெற்றிக்கு உழைத்த தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகள் தேவராஜ், ராஜன், முனுசாமி, என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு பாராட்டும் தெரிவித்துக்கொண்டார்.

வெற்றி விவரம்
சென்னை மாநகராட்சி கத்திவாக்கம் பணியாளர்கள் சிக்கன நாணய சங்கம் (எண்ணூர்) இயக்குநர்களாக சி.ஏபு, ஜி.சுதா, ஒய்.சாம்சன், பி.ரவணம்மா, ஏ.புரட்சி, கே.தேவதாஸ்,சென்னை மாநகராட்சி மண்டலம் -1(திருவொற்றியூர்) பணியாளர்கள் சிக்கன நாணய கடன் சங்க இயக்குநர்களாக எஸ்.சாந்தி, எல்.சேனியம்மா, பி.பிரகாஷ், எம்.காத்தவராயன்,சென்னை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு பண்டக சாலை இயக்குநர்களாக பி. ராஜாமணி, என்.செல்வராஜ், டி. ராஜன், ஆர். ஆறுமுகம், கே.தேவராஜ், கே. குமரேசன், கே. செல்வகுமார், எஸ்.மூர்த்தி, மோகனா, சத்தியா, ஜெயலட்சுமி,சென்னை மாநகராட்சி தொழிலாளர் கூட்டுறவு சங்க(சிந்தாதிரி பேட்டை), இயக்குநர்களாக எஸ். வரதராஜன்( தலைவர்), பி. குமார் (துணைத் தலைவர்), பி.எங்கைய்யா, எஸ்.மாலகொண்டம்மா, வி.நிர்மலா, கே.சாந்தி, சி.கர்ணவேல், ஜி.கே.சுதாகர்,சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கூட்டுறவு சங்க இயக்குநர்களாக வி.சிவக்குமார் (தலைவர்), ஆர்.ஷீலா சாந்தி, எம்.ராஜா, சி.ராஜா, சி.ஜீவன், ஆர்.இந்துமதி, வி. சவுந்தர ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.