===மதுக்கூர் இராமலிங்கம்===
பிரளயம் என பெருக்கெடுத்த பெருவெள்ளம் கேரள மாநிலத்தையே புரட்டிப் போட்டு விட்டது. மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. 5,645 முகாம்களில் 7.24 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு முனைப்புக் காட்டி மும்முரமாகச் செயல்படுகிறது. முதல்வர் துவங்கி, அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாவலாக நிற்கின்றனர்.

உலகின் பல பகுதிகளிலிருந்து, தண்ணீரில் தவிக்கும் கேரள மக்களின் கண்ணீர் துடைக்க நேசக் கரங்கள் நீள்கின்றன. உலக நாடுகள் முதல் உள்ளூர் மக்கள் வரை தாராளமாக அள்ளித் தருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் அனைத்து முனைகளிலிருந்தும் உதவிக்கரம் நீள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தோழர்கள் தங்களால் இயன்றதை தந்துவிட்டு, வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று நிதியையும் நிவாரணத்தையும் பெற்று அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் முதல் கால்நடை உதவி மருத்துவர்கள் வரை தங்கள் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு தர மனமுவந்து முடிவு செய்துள்ளனர்.

தென்காசியில் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா தனது மோதிரத்தை கழற்றி நிவாரண நிதிக்கான உண்டியலில் போட்டுள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி அனுப்பிரியா, பிறந்த நாளுக்காக சைக்கிள் வாங்க ஆசையாகச் சேர்த்து வைத்த 8,846 ரூபாய் மதிப்புள்ள சில்லரைக் காசுகளை அப்படியே கேரள முதல்வருக்கு அனுப்புமாறு தன் தந்தையிடம் கொடுத்துள்ளார். இப்படி நெகிழ்ச்சியூட்டும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி , கேரள உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜமாணிக்கம், வயநாடு துணை ஆட்சியர் உமேஷ், பத்மநாபபுரம் துணை ஆட்சியர் ராஜகோபால் ஆகியோர் லாரிகளிலிருந்து அரிசி மூட்டைகளை தங்கள் முதுகில் சுமந்து இறக்கியுள்ளனர். இயல்பிலேயே மதநல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் கொண்ட கேரள மக்கள் தங்களது துயரை சகோதர பாசத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருந்த மாநில முதல்வர் பினராயி விஜயன், தன் உடல்நலம் மறந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அல்லும் பகலும் பணியாற்றி வருகிறார். மீட்புப் படகில் பெண்கள் ஏற முடியாத நிலையில், தண்ணீருக்குள் குனிந்து நின்று கொண்டு தன்னுடைய முதுகின் மீது ஏறிச் செல்ல வசதியாக தானூரைச் சேர்ந்த மீனவ சகோதரர் கே.பி.ஜெய்சன் உதவி செய்யும் காட்சி மனிதத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், எங்கள் மாநிலத்தின் ராணுவ வீரர்கள் மீனவர்கள்தான் என்றும் இவர்களது உதவியை மறக்கவே முடியாது என்றும் நன்றிப் பெருக்கோடு கூறியுள்ளார். ஹெலிகாப்டர் செல்ல முடியாத இடங்களிலும் கூட மீனவர்களின் படகுகள் நுட்பமாகச் சென்று மனித உயிர்களை காப்பாற்றி வருகின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் சேதமான படகுகளை சீர்செய்யும் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சென்னை பெருவெள்ளத்தின் போதும் மீனவத் தோழர்கள் ஆற்றிய அரும்பணி மறக்க முடியாது.
ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த கெடுமதியாளர்களும் அவர்களது சொம்பு தூக்கிகளும் துக்க வீட்டில் பறித்தது வரை ஆதாயம் என்பது போல, இந்த இடர்மிகுந்த வேளையிலும் தங்கள் இடக்கு வேலையை செய்து வருகின்றனர்.

சென்னை வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவுவதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். ஆனால், அது காஷ்மீரில் எடுக்கப்பட்ட படம் என்பது உடனடியாகவே தெரியவந்தது. அதேபோல, தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதுபோல ஒரு படத்தை வெளியிட்டது அந்தக் கூட்டம். ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன்பு வேறெங்கோ எடுக்கப்பட்ட கோப்புப்படம் என்ற உண்மை வெளியாகிவிட்டது. வெள்ள நிவாரணப் பணிகளில் செங்கொடி இயக்கப் புதல்வர்கள் உயிரைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்க, இவர்களோ போட்டோஷாப் பணியில் முனைப்புக் காட்டுகின்றனர்.

மீட்புப் பணியை ராணுவத்திடம் ஒப்படைக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுத்துவிட்டதாக, ஒரு ராணுவ வீரரே வீடியோவில் பேசுவது போன்ற காட்சியை ஆர்எஸ்எஸ் கூட்டம் பரவ விட்டு வருகிறது. தலச்சேரியில் இயங்கும் மகிளா மோர்ச்சா என்ற அமைப்பு இதை 28 ஆயிரம் முறை பகிர்ந்து ‘ மீட்புப் பணியில்’ ஈடுபட்டுள்ளனர். எதற்காக இந்த கேடுகெட்ட வேலை? ஒரு துணை நடிகருக்கு ராணுவ உடை அணிந்து பொய்யை பரப்புவதன் நோக்கம் என்ன? இந்த இழிசெயலை ராணுவத்துறையே கண்டித்துள்ளது.

இன்னொரு வேலையையும் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டம் செய்து வருகிறது. கேரளத்தில் பெருமளவு வெள்ளம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. அவ்வாறு கூறி கம்யூனிஸ்டுகள் வசூல் செய்கிறார்கள். முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் யாரும் அனுப்ப வேண்டாம். அந்தப் பணம் மக்களுக்குப் போய்ச் சேராது என்ற வாசகங்களுடன் அவதூறு வாட்ஸ் – அப் செய்தியை பரவ விட்டு வருகிறது இந்தக் கூட்டம். மூளை அழுகிப் போனவர்களால்தான் இப்படியெல்லாம் சிந்திக்கவும் செயல்படவும் முடியும்.

மறுபுறத்தில் டிவிஎஸ் முதலாளிக்கு முட்டுக் கொடுத்த ஆடிட்டர் குருமூர்த்தி கேரள வெள்ளத்தில் நீந்திச் சென்று ஐயப்பனை அசிங்கப்படுத்தி இருக்கிறார். சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாமா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. அனுமதிக்கலாம் என கேரள இடது ஜனநாயக முன்னணி அரசும் வாதிட்டுள்ளது. ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிற்கும் கேரளத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் இந்த இலவச சட்ட வல்லுநர்.
ஐயப்பன் கோவிலே அங்கு மூழ்கி விட்டது. அதைப் பாதுகாக்க, படை அனுப்ப இவர்களுக்கு வக்கில்லை. மாறாக, பெண்களை கோவிலுக்குள் எப்படியும் விட்டுவிடக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறது இந்தக் கூட்டம்.

இந்த விசித்திர விஞ்ஞானியைத்தான் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக நியமித்திருக்கிறது மோடி அரசு. புதிதாக அச்சடிக்கப்படும் பணத்தாள்களில் மஞ்சள், குங்குமம் வைத்து அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
குருமூர்த்தியின் கருத்துக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.

குருமூர்த்தி சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. மகாத்மா காந்தியின் வழியில் நின்றுதான் இந்தக் கருத்தை குருமூர்த்தி வெளியிட்டிருக்கிறார். 1934 ஆம் ஆண்டு பீகாரில் பூகம்பம் ஏற்பட்ட போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்காக தரப்பட்ட தண்டனைதான் இது என்று காந்தி கூறியதைப் போல, தற்போது குருமூர்த்தி கூறியிருப்பதாக, மார்க்கண்டேய கட்ஜூ தெளிவுரை, பொழிப்புரை எழுதியுள்ளார். காந்தி கூறியது, தீட்டு என்று கூறி உழைக்கும் மக்களை ஒதுக்கி வைப்பவர்களை கண்டு எழுந்த கோபத்தின் வெளிப்பாடு. ஆனால், குருமூர்த்தி கூறியிருப்பது தீட்டு என்று சொல்லி பெண்களை ஒதுக்கி வைக்கும் பிற்போக்குக் கருத்துக்கு முட்டுக் கொடுப்பது. இதற்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆதரவு தெரிவித்திருப்பது அபத்தமானது. நல்லவேளை, இந்த மகானுபவர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இல்லை. இருந்திருந்தால், ஐயப்பன் கோவிலை இழுத்துப் பூட்டியிருப்பார்.

இவ்வளவு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழகத்தின் கலவர ஸ்பெஷலிஸ்ட் எச்.ராஜா சும்மா இருப்பாரா? மனுஷ்யபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதி வரும் சாகுல் ஹமீது என்ற கவிஞர் இந்துக் கடவுள்களை இழிவாக எழுதிவிட்டார். எனவே அவருக்கு எதிராக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சென்று பாஜகவினர் புகார் கொடுக்க வேண்டும் என்று பகைமைத் தீயை பற்ற வைத்துள்ளார். புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் இந்து பெண் தெய்வங்களை இழிவுபடுத்தியபோது, போதிய எதிர்வினையாற்றவில்லை. எனவே, இப்போது மனுஷ்யபுத்திரனை கைது செய் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என ஊதிவிட்டுள்ளார். தோழர் சுந்தரவள்ளி முகநூலில் ஐயப்பன் கோவில் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, ஆபாச அர்ச்சனை செய்து வருகிறது இதே கூட்டம்.
ஐயப்பனையும், இந்து பெண்களையும் ஒருசேர அவமதிப்பது குருமூர்த்தி, எச்.ராஜா வகையறாதான்.

மோடி தலைமையிலான அரசோ கேரள வெள்ள நிவாரண நிதியாக அள்ளித் தராவிட்டாலும் கிள்ளித்தருவதற்கும் யோசிக்கிறது. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்நூறு கோடி மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனாலும், ஒரே மனிதனாக எழுந்து நின்று போராடும் கேரள மக்களும் உலகம் முழுவதுமிருந்து நீளும் உதவிக்கரங்களும் நிலைமையை விரைவில் சீராக்கிடும். பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளங்கும் கேரளம் வெள்ள நிவாரணத்திலும் மீட்பிலும் முன்னோடியாகத் திகழும்.

Leave a Reply

You must be logged in to post a comment.