திருப்பூர்,
கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்படவர்களுக்கு திருப்பூர் திருநங்கைகள் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திங்களன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

திருப்பூர் மாவட்ட பெரிய வீடு திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சமையல் பொருட்களை திங்களன்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதையிடம் அளித்தனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறியதாவது: திருப்பூர் நெருப்பெரிச்சல், அம்மாபாளையம் பகுதிகளில் தங்கியுள்ளோம். திருப்பூரில் பெரிய வீடு திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் 60 பேர் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறு உதவி செய்ய வேண்டும் என நினைத்தோம். அதன்படி, எங்களது ஒவ்வொருவரது இரண்டு நாள் வருமானமான ரூ.500ஐ சேகரித்து மொத்தம் ரூ.30 ஆயிரம் திரட்டினோம். இந்த தொகை மூலம் கேரளா மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சானிட்டரி நாப்கின் உட்பட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்கினோம். மேலும், அவற்றை சமூகநலத்துறை அலுவலரிடம் ஒப்படைத்து, கேரளாவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம் என்றனர்.

இதையடுத்து, திருநங்கைகள் அளித்த பொருட்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை பெற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகம் திரட்டி வரும் நிவாரண சேமிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார். திருநங்கைகளின் இந்த முயற்சிக்கு சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.