கோவை,
வெள்ளத்தில் தவிக்கும் கேரளத்தை காப்போம் என்கிற உறுதியுடன் சிபிஎம், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்புவதில் தீவிர முனைப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் பின்புறம் உள்ள கேரளா கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள் கேரள வெள்ள நிவாரணத்திற்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர். கேரள கிளப் சிஐடியு சங்கத்தின் சார்பில் வசூலிக்கப்பட்ட ரூ.25 ஆயிரத்து 500 வரைவோலையை கேரள கிளப் சிஐடியு தலைவர் சந்தோஷ், செயலாளர் ஏ.பாபு, பொருளாளர் வி.நகாராஜன், துணைச் செயலாளர் ஏ.ரவீந்திரன் ஆகியோர் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபனிடம் வழங்கினர். கணபதி, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்தனர். சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பாய், நாப்க்கின் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் குயின்பேக்கரி பிரதீப், ஸ்ரீகிருஷ்ணா ஜீவல்லரி மனோஜ், மூத்த வழக்கறிஞர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆறுமுகம், மாதர் சங்கத்தின் பங்கஜ வல்லி மற்றும் வனஜா உள்ளிட்டோர் இந்நிவாரண பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கீரணத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 1,700 கிலோ அரிசி மற்றும் பருப்பு, பால்பவுடர், பிஸ்கட்உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரள மாநிலம் இடிக்கி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோவை உடையாம்பாளையம், சௌரியபாளையம், சித்ரா ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்தனர். இதில் சிங்காநல்லூர் உழவர் சந்தையில் உள்ள உழவர் நலச்சங்கம் சார்பில் 2 டன் காய்கறிகளை அளித்தனர். மேலும், மூன்று டன் அரிசி, 100 கிலோ பால் பவுடர் மற்றும் போர்வை, துண்டு உள்ளிட்ட சுமார் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேகரித்து கேரள மாநிலம் அட்டப்பாடி முகாமில் உள்ள மக்களிடம் வழங்கப்பட்டது. இதனைகேரள தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் பெற்றுக்கொண்டார். இந்த வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பில் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் அ.கரீம்,பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் கோவை ஒருங்கினைப்பாளர் சுப்பிரமணி, உழவர் நலச்சங்க குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரிட்டோ, சரவணன், சந்தோஷ் உள்ளிட்டோர் கேரள அமைச்சரிடம் வழங்கினர்.

இதேபோல் ஆனைமலை ஒன்றியம் வேட்டைக்காரன்புதூர் பகுதியில் சிபிஎம் கட்சி கிளைகள் சார்பில்வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் ரூ.10 ஆயிரத்து 526 சேகரிக்கப்பட்டது. கோவை கிழக்கு நகரக்குழு புலியகுளம் சிபிஎம் கட்சி கிளைகள் சார்பில்ரூ.6 ஆயிரம் 683 வசூல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதில் கட்சியின் கிழக்கு நகர குழு உறுப்பினர் த.நாகராஜ் மற்றும் ஆனந்தகுமார், சித்ரா உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை பெரியகடைவீதி, குமரன்வீதி,ரங்கேகவுண்டர் வீதி, ஆர்எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மாநிலத்திற்கான வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.இதில் சுமார் ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 750 கிலோ அரிசி, பிஸ்கட் மற்றும் புத்தாடைகள் சேகரிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு நகரக்குழு செயலாளர் பி.கே.சுகுமாரன், சுமைப்பணி சங்க பொதுச்செயலாளர் எம்.ஏ.பாபு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்.வி.தாமோதரன், மூர்த்தி, ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், கோவை மாவட்ட தங்கநகை தொழிலாளர் யூனியன் சார்பில் தங்கநகை தொழிலாளர்களிடம் கேரள மாநில வெள்ள நிவாரண நிதி இயக்கம் நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம்.அருணகிரிநாதனிடம் வழங்கப்பட்டது. இதில் தங்கநகை சங்கத்தின் தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் பி.சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கோபால், கனேசன், சஜிவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தி மலைக்கமிட்டி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.12 ஆயிரம் 360 வசூல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, மலைக்கமிட்டி செயலாளர் சி.துரைசாமி, மாவட்டக்  குழு உறுப்பினர் பி.சடையப்பன், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தாயிலம்மாள், சாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.