காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கேரளாவில் பெருமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் இரண்டாம் கட்டமாக 30.14 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுப்பி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ரூ.22 லட்சத்து 58 ஆயிரத்து 555 மதிப்பிலும், வருவாய் துறை சார்பில் மதுராந்தகம் மற்றும் செங்கல் பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் ரூ.7 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலும், காஞ்சிபுரம்-சென்னை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் ரூ.50 ஆயிரத்து 15 மதிப்பிலும் சேர்த்து ரூ.30 லட்சத்து 14 ஆயிரத்து 570 மதிப்பிலான அரிசி மூட்டைகள், பால் பவுடர், பிஸ்கட், உப்பு, மளிகை பொருட்கள், சோப்பு, பேஸ்ட், பிரஸ், தண்ணீர் கேன், சானிடரி வகைகள், நோட்புக், பேனா, பென்சில், டிபன் பாக்ஸ், வாளி, தொப்பி, துணி வகைகள், பாய், தலையணை, மருந்து பொருட்கள் மற்றும் இதர வாழ்வாதார பொருட்கள் அடங்கிய 33.5 டன் வெள்ள நிவாரண பொருட்களை இரண்டாம் கட்டமாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கேரளாவின் பாலக்காடு நிவாரண முகாமிற்கு அனுப்பி வைத்தார்.  இம் மாவட்டத்திலிருந்து 2 கட்டங்களாக ரூ.61 லட்சத்து 59 ஆயிரத்து 70 மதிப்பிலான 58.5 டன் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்காக அரசுத்துறை அலுவலர்கள், தொழிற்சாலைகள், பொதுமக்கள் உதவியோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.நூர்முகம்மது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜீ, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ. 31.44 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.