===வீ. அமிர்தலிங்கம்===                                                                                                                                                       கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கனமழையின் காரணமாக, கர்நாடகாவில் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதும், இதனால் கடந்த மாதம் 3-வது வாரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி
வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்த நீர் வரத்தால் ஒரு மாதத்திலேயே 2 முறை மேட்டூர் அணை கொள்ளளவான 120 அடியை எட்டியது முக்கியச் செய்தியானது.
டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய 12 மாவட்டங்களுக்கான பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 19.07. 2018 அன்றும், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட விவசாயத்திற்காக கல்லணை 22.07.2018 அன்றும் திறக்கப்பட்டது.

அணை நிரம்பியதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இருந்தாலும் அணை திறப்பதற்கு அரசு அவசரம் காட்டியதில் ஆச்சரியமில்லைதான். ஆனால் டெல்டா மாவட்டங்களில், காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடந்து வரும் அந்த பணிகளை விரைந்து செயல்படுத்திடவும் அதற்காக ஆறுகள், வாய்க்கால்களை அடைத்து போடப்பட்டுள்ள மண் தடுப்பு அரண்களை அப்புறப்படுத்தக் கூட அறிவிக்காமல் அணை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாற்று வழிகளில் நீரை
பாசனப் பகுதியில் அனுப்பவும் முடியாமல் கோரையாறு, அன்னப்பிள்ளையாறு, மல்லியனாறு, அடப்பாறு, நல்லாறு, அரசலாறு, முடிகொண்டான் ஆறு, வளப்பாறு உள்ளிட்ட ஆறுகளின் வழியாக சாகுபடிக்குப் பயன்படாமல் கடலுக்குச் சென்றது பல்லாயிரம் கனஅடி நீராகும்.

ஆளும்கட்சி பிரமுகர்களின் நலன்களுக்காக, சாகுபடிக்கு விவசாயிகளை தயார்ப்படுத்த நேரடி நெல் விதைப்பு செய்ய, சாகுபடி துவங்கும் முன்பே வேளாண்துறையால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து, எவ்வித அறிவிப்பையும் அரசோ, வேளாண்மை துறையோ அறிவிக்காதது, டெல்டா மாவட்ட விவசாயத்தின் மீதும்,விவசாயப் பெருங்குடி மக்களின் மீதும், ஆட்சியாளர்களின் அக்கறையற்ற போக்கைக் காட்டுகிறது.
பாசனக் கட்டமைப்புகளை

பராமரிக்காத அரசு
காவிரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரானது பாசன ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகளில் பாய்ந்து உரிய காலத்தில் விவசாயப் பணிகள் நடந்தது போக கடலுக்குச் செல்வது காலம்  காலமாக கட்டமைக்கப்பட்டிருந்த இயற்கை விதி. ஆனால் நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் வேலையை முழுமையாக பறித்திடஎந்திரங்களை மானிய விலையில் வழங்கிட துடிக்கும் எடப்பாடி அரசு நூற்றுக்கணக்கான எந்திரங்களை பயன்படுத்தி சில நாட்களிலேயே தூர்வாரும் பணியை நிறைவேற்றிட வாய்ப்பிருந்தும் செய்யாமல், தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நேரத்தில் பாசன ஆறுகளில் எந்திரங்களை இறக்கி அவசர கதியில் தூர்வாரி விட்டதாக அறிவித்து அதிலும் கொள்ளையடிப்பதே ஒவ்வொராண்டின் வாடிக்கையான நடவடிக்கையாக மாறிவிட்டது. அதுவே இந்தாண்டும் நடந்துள்ள ஆளும் கட்சிக் காரர்களின் செயற்கை விதியாக மாறிவிட்டது.

குடிமராமத்துப் பணி திட்டம் என்ற பெயரில் ஆறுகள், ஏரிகளைப் புனரமைக்க முதற்கட்டமாக ரூ.100 கோடியும் 2ஆம் கட்டமாக ரூ.328 கோடியும் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டப் பணிகளில் ஆளும்கட்சிக்காரர்கள் தண்ணியோடு தண்ணியாக வேலையை முடித்து விட்டனர். இரண்டாம் கட்டப் பணிகளை விவசாயிகள் பாசனதாரர்கள், விவசாய அமைப்புகள், இணைந்து மேற்கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது மூன்றாவது கட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவை யாவும் குறைந்த பட்சம் ஆறுமாத காலத்திற்கு முன்பாகத் துவக்கி முடித்திருக்க வேண்டிய பணிகள்.

டெல்டா மாவட்டங்களில் பல நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் பல ஆண்டுகளாக நடக்காததால் தூர்ந்து போய் புதர்கள் மண்டி காட்டைப்
போல இன்றும் காட்சியளிக்கும் நிலையில் உள்ளது. இதனால்தான் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேரடி விதைப்புச் செய்த சுமார் 2 லட்சம் ஏக்கர்
விவசாயப் பகுதி தண்ணீருக்காக காத்துக் கிடப்ப தும், அதே நேரம் 1 லட்சம் கன அடிக்கும் மேல்
தண்ணீரை கடலுக்கு அனுப்புவதுமான மோசமான நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.

காலம் தவறும் விவசாயம்
குருகிய கால சாகுபடியான (110 நாட்கள்) குறுவை சாகுபடியை உரிய காலத்தில் துவங்க முடியாமல், நீண்ட கால ரகங்களான (150 – 180 நாட்கள்) நெல்லை சாகுபடி செய்வதற்கான காலத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல், மத்திய காலரகம் நெல் சாகுபடிக்கான (140 நாட்கள்) காலத்தை யும் தவற விடும் சூழலும் ஆட்சியாளர்களாலும், இயற்கையாலும் அபாயத்தை உருவாக்கும்.

அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 60 நாட்கள் வடகிழக்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் 15க்கு முன்பாக நெற்பயிர் வளர்ந்து பூக்கும் தருணத்தில் இருந்தால் மழையால் மகரந்தங்கள் கழுவப்பட்டு சிதறி பால் புடிக்காமல் பதராக மாறி பெருத்த மகசூல் இழப்பிற்கு
வழிவகுக்கும். அதே போல சாகுபடி துவங்கிட மிகவும் தாமதமானால் சாகுபடிக்கு தண்ணீர் சரியாக கிடைக்காமல் பயிரனாது சரியாக பால் புடிக்காமலும் மகசூல் இழப்பை உருவாக்கும். இதையெல்லாம் உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் “காலத்தே பயிர் செய்” என்றார்கள். காவிரி தண்ணீர் கிடைக்காமல் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இழப்பைச் சந்தித்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு போதிய தண்ணீர் கிடைத்தும் ஆட்சியாளர்களின் தவறான செயல்பாட்டால் கேள்விக்குறியாகி உள்ளது விவசாயம்.

தவறவிடப்பட்ட தண்ணீர்க் கணக்கும் மேலாண்மையும்                                                                                                        ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் மழை நீரின் அளவையும், காவிரியின் தண்ணீரின் அளவையும்,ஆராய்ந்து விவசாயப் பயன்பாட்டிற்குத் தேவையான தண்ணீர் போக, கடலுக்கு அனு ப்பியது காலம் காலமாக இருந்து வந்துள்ள முன்னோர்களின், ஆட்சியாளர்களின் வழிமுறை. ஆனால் இன்று இந்த தண்ணீர்க் கணக்குகளும், தண்ணீர் மேலாண்மையும் பின்பற்றப்படுகிறதா என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுந்து உள்ளது. அதனால் தான் இன்னும் டெல்டாவின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் போகாமலும் நூற்றுக்கணக்கான குளங்கள், ஏரிகள்,வறண்டு கிடக்க, உபரிநீர் என சொல்லி தண்ணீரை கொள்ளிடத்தின் வழியாக கடலுக்கு அனுப்புகிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.கோடை காலங்களில் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். குழாய் மதகுகள், சட்டர்கள் சீரமைக்க  வேண்டும். தண்ணீர் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும்.

விவசாயப் பகுதிகளை சீரழிக்கின்ற இறால் பண்ணைகளை அழித்திட வேண்டும். சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் தரிசாகப் போடப்பட்டுள்ள பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களை மேம்படுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டு நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் விவசாயப் பகுதிகளில் உள்ளடங்கிய சிறு குறு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இந்த ஒட்டு மொத்தப் பணிகளையும் உள்ளூர் மட்ட அளவிலான விவசாயிகள், விவசாய அமைப்பு களால் முன்மொழியப்பட்டு பெரும் திட்டம் உரு வாக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதே டெல்டா மாவட்ட விவசாயத்தையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் “ ஒரே வழி, சிறந்த வழி ” .
இல்லையேல் இதற்கான எழுச்சிமிக்க போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக உருவெடுக்கும்.

கட்டுரையாளர்:மாநில பொதுச்செயலாளர்,
அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கம்.

Leave a Reply

You must be logged in to post a comment.