கலைஞர் கருணாநிதி தொடர்பான ஃப்ரண்ட்லைன் சிறப்பிதழ், மாபெரும் தலைவர் ஒருவருக்கு மிகவும் பொருத்தமான சமர்ப்பணமாகும். அவருடன் எனக்கான தொடர்பு என்பது  அறுபதாண்டு கால நட்புடன் கூடியதாகும்.  அவருடன் நான் சுமார் அறுபதாண்டு கால நட்பினைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய பூதவுடலை அடக்கம் செய்திட இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு ஆணை பிறப்பித்த மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை, ஜனநாயகத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இந்தத் தீர்ப்பானது, கருணாநிதி வாழ்ந்த சிறப்புமிக்க வாழ்க்கையைச் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அவரை எனக்கு 1952லிருந்து தெரியும். திமுக, “திராவிட நாடு” கோரிக்கையை உயர்த்திப்பிடித்திருந்த சமயத்தில்,  திமுகவிற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இத்தகு கருத்தாக்கம், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எதிரானதாக அமைந்திடும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினார்கள். இதன் காரணமாகத்தான், 1957இலும் 1962இலும் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது திமுகவுடன் ஒரு தேர்தல் புரிந்துணர்விற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் வர முடியவில்லை.

1962 தேர்தல்களைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பின்னர்தான்,  இரு கட்சிகளுக்கும் இடையேயான புரிதல் ஒரு சரியான ஆர்வத்துடன் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1967 பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இது, தமிழ்நாட்டில் அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இட்டுச் சென்றது.

திமுக தலைமையில் ஆட்சி அமைந்தபின்னர், சமூக நீதி தொடர்பாக எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள், சுயமரியாதைத் திருமணம் குறித்த ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  அத்தகைய திருமணத்திற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று, மாநிலத்தில் எண்ணற்ற தம்பதிகள் இம்முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தகைய திருமணங்களை நடத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு ஓர் ஒளிவிளக்காக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் இணைந்து மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களுக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் பல கூட்டுப் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன. இதன் விளைவாக, மாநில மொழிகளுக்கு விரிவான அளவில் அங்கீகாரங்களும், குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் கூட, இம்மொழிகள் இன்றையதினம் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

உண்மையில், அவர் என்னை,  தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டினார்.  நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தீண்டாமைப் பிரச்சனை தொடர்பாக மதுரையில் ஒரு மாநாட்டினை நடத்தினார். அதில் நான் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தீண்டாமைக் கொடுமைகளின் பலவிதமான வடிவங்கள் குறித்தும் விவரித்தேன். அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டதுடன், பின்னர் அவர் பதில் அளிக்கையில் தன்னுடைய அரசாங்கம் எந்தெந்த விதங்களில் எல்லாம் இதுவரை நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்றும், எதிர்காலத்தில் எடுக்க இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்தார்.   இதே போன்றதொரு மாநாட்டை நெய்வேலியிலும் நடத்தினோம். அதிலும் அவர் பங்கேற்றார்.

அதேபோன்று, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அது, அவருடைய ஜனநாயக அணுகுமுறையைக் காட்டுகிறது. திருக்குறளுக்குச் செல்வாக்கை ஏற்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்கதொரு பங்களிப்பினை ஆற்றினார். மாக்சிம் கார்க்கியின் சிறந்ததொரு படைப்பான “தாய்” நாவலை அவர் தமிழில் கவிதை வடிவத்தில் இயற்றினார்.  அந்நூலுக்கு ஒரு முன்னுரையை எழுதித்தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் வெளியீட்டு விழாவிற்கும் என்னை அழைத்திட்டார்.

அவர் ஓர் எளிமை மற்றும் மனந்திறந்த தலைவராவார். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர். மாற்றுக் கருத்துக்களை அவர் எப்போதுமே மதித்திடுவார். அவற்றில் எப்போதும் உண்மைகள் இருக்கிறதா என்று ஆய்ந்திடுவார்.

அவர், நீண்ட காலம் அரசியல் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டிய நிலையில் இன்றைய தினம் நாட்டிலுள்ள  சூழ்நிலைமை உள்ளது. வடக்கிலிருந்து வரும் குரல்கள் மிகவும் வலுவானவைகளாகவும், உரத்ததாகவும் மாறியிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற கட்சிகளைத் தன் அணியில் வைத்துக் கொள்வதைத் தொடர வேண்டும். எங்கள் நட்பு அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.

(நன்றி: ப்ரண்ட்லைன்)

(தமிழில்: ச. வீரமணி

Leave A Reply

%d bloggers like this: