கோவை,
இன்சூரன்ஸ் பிரிமியத்தில் வசூலிக்கப்படும் சேவை வரியை கைவிட வேண்டும் என எல்ஐசி பென்சனர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.

எல்ஐசி பென்சனர் சங்கத்தின் கோவை கிளையின் 11 ஆவது பொது மாநாடு காந்திபுரம் சிவானந்தா மெமோரியல் அரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமத்தாள் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் செயலாளர் குருராவ் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் கவிஞர் ந.முத்துநிலவன், பொது மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இம்மாநாட்டில் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களிடம் பிடிக்கப்படும் 18 சதவிகித சேவை வரியை பிடிப்பதை மத்திய அரசு மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் கைவிட வேண்டும். ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை எல்ஐசி வாங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் வழங்க வேண்டும். சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிசாலை திட்டத்தை கைவிட வேண்டும். குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் வழங்கும் நடவடிக்கையை கோவை மாநகராட்சி கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவை கிளையின் தலைவராக ராமாத்தாள் ஜெயராமன், செயலாளராக பி.விஷ்வநாதன், பொருளாளராக எஸ்.பி.ரங்கநாதன் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.