புதுதில்லி:
இந்திய விவசாயிகளின் வசமிருக்கும் சராசரி நிலத்தின் அளவு குறைந்துள்ளதாக, வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
2015-16ஆம் ஆண்டுக்கு உரிய இந்த ஆய்வில், இந்திய விவசாயிகளிடம் சராசரியாக 1.1 ஹெக்டேர் நிலம் உள்ளது; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை எடுத்துக் கொண்டால் 1.16 ஹெக்டேர் அளவிற்கு விவசாயிகளிடம் நிலமிருந்தது; இப்போது மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளிடம் 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் மட்டுமே இருக்கிறது என்று நபார்டு தெரிவித்துள்ளது.“37 சதவிகித விவசாயக் குடும்பங்களிடம் 0.4 ஹெக்டேருக்குக் குறைவான நிலமும், 30 சதவிகிதத்தினரிடம் 0.41 ஹெக்டேர் முதல் 1 ஹெக்டேர் வரையிலான நிலமும் இருக்கிறது. 13 சதவிகித விவசாயிகளிடம் மட்டுமே 2 ஹெக்டேருக்கு அதிகமான விவசாய நிலம் இருக்கிறது; மாநில வாரியாகப் பார்த்தால், நாகாலாந்து மாநில விவசாயிகளிடம் சராசரியாக 2.1 ஹெக்டேர் நிலமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1.9 ஹெக்டேர் நிலமும், ஹரியானா மாநிலத்தில் 1.7 ஹெக்டேர் நிலமும் விவசாயிகள் வசமிருக்கிறது” என்று நபார்டின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்களைப் பொறுத்தவரையில்- 5.2 சதவிகித விவசாயக் குடும்பங்களிடம் மட்டுமே டிராக்டர்கள் இருக்கின்றன; அதேபோல 1.8 சதவிகித விவசாயிகளிடம் மட்டுமே பவர் டிரில்லர்கள் இருக்கின்றன; 1.6 சதவிகிதத்தினரிடம் மட்டுமே நீர்ப் பாசன வசதிக்கான கருவிகள் இருக்கின்றன; 0.8 சதவிகிதத்தினரிடம் மட்டுமே நீர்த் தெளிப்பான் கருவிகள் இருக்கின்றன என்றும் நபார்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.