ஜெய்ப்பூர்;
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே நடத்த இருப்பது, கௌரவ யாத்திரையல்ல, அது, பாஜக ஆட்சி மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வதற்கான யாத்திரை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.2018 இறுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் வரவுள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் வசுந்தரா ராஜே சிந்தியா, எப்படியாவது மீண்டும் வெற்றிபெற்று, பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அண்மையில் நடைப்பெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றது, அவரை அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதனால், பாஜக அரசின் சாதனைகளை விளக்கி 58 நாட்களுக்கு ஊர் ஊராகச் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதென வசுந்தரா ராஜே முடிவு செய்துள்ளார். இந்த யாத்திரைக்கு ‘கௌரவ யாத்திரை’ என்ற பெயரையும் அவர் சூட்டியுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா-வே நேரடியாக இந்த யாத்திரையை துவங்கி வைக்கிறார்.

கௌரவ யாத்திரை துவங்கக் கூடிய மேவார் பகுதி, ஏற்கெனவே பாஜக-வுக்கு செல்வாக்கு இல்லாத பகுதி என்பதால், துவக்க நிகழ்ச்சிக்கு வெளியூர்களிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்து இறக்குவதில் பாஜக-வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், வசுந்தரா ராஜே மேற்கொள்ளும் இந்த யாத்திரையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. “வசுந்தரா ராஜே-யின் பயணம் மக்களை ஏமாற்றுவதற்கு அரசு செலவில் நடக்கும் பாஜக-வின் தேர்தல் பிரச்சாரப் பயணமாகும்; யாத்திரையின்போது, அனைத்து இந்து கோயில்களுக்கும் வசுந்தரா செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, மத ரீதியாக வாக்குகளை திரட்டும் முயற்சியும் ஆகும்; ஆனால், மக்கள் அனைத்தையும் அறிந்தே இருக்கிறார்கள்; எனவே, இந்த கௌரவ யாத்திரை, பாஜக ஆட்சி, ராஜஸ்தானைவிட்டு விடைபெறுவதற்கான யாத்திரையாகவே இருக்கும்” என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.