கோயம்புத்தூர்;
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை மூடும் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் செப்டம்பர் 12-ல் தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என மாணவர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை அதிகரிக்க வேண்டும்; மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்; தண்ணீர் உரிமையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மாநில மாநாட்டின் சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளிகளை தொடர்ந்து மூடி, தனியார் பள்ளிகளை திறக்க தாராள அனுமதி வழங்கும் தமிழக அரசைக் கண்டித்து செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள 500 கல்வி நிலையங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.