நாகப்பட்டினம்,
தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் 21ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் நினைவுப் பேரவைக் கூட்டம் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம்பாங்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சின்னஞ்சிறிய பாங்கல் கிராமத்தில் பிறந்து தொடக்கப் பள்ளி வரை கல்வி பயின்று உழைப்பாளர் வர்க்கத்திற்காகவும், ஏழை, எளியோர், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள் உள்ளிட்டோருக்காகவும் பாடுபட்டவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி. அவர், தான் பிறந்த பாங்கல் ஊராட்சியில் 15 ஆண்டுக்கும் மேலாக ஊராட்சி மன்றத் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகச் செயல்பட்டவர். தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக பணியாற்றி, ஒன்றிய வளர்ச்சிக்காகப்பாடுபட்டவர். தோழர் பி.சீனிவாசராவுடன் இணைந்து, விவசாயிகள் இயக்கங்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் அயராது உழைத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்று இயக்கத்தை வளர்த்தவர்.

பாங்கலில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு மற்றும் பி.எஸ்.டி.குடும்பத்தார், கிராம மக்கள் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற பி.எஸ்.டி.நினைவுப் பேரவைக் கூட்டத்திற்கு சி.பி.எம்.தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.