திருப்பூர்,
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் இப்பொருட்களை அனுப்பி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தின் மூலமாக ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதல்கட்டமாக ரூ.50 லட்சம் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 1,435 கிலோ அரிசி, 60 பெட்டி தண்ணீர் பாட்டில்கள், 50 கிலோ துவரம்பருப்பு, துணி, பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், பிஸ்கட்டுகள் மற்றும் பாக்குமட்டை தட்டுக்கள் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு முதற்தட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான தடுப்பூசிகள், தீவனம் மற்றும் சத்து மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டது.

கேரளாவிற்கு அதிக அளவில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு திருப்பூர் மாவட்ட மக்கள் முன்வந்து, பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் வழங்க முன்வருமாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர், சார் ஆட்சியர் ஷ்வரன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.