கோவை,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் கோவையில் பல்வேறு அமைப்பினர் வெள்ள நிவாரண வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இந்த பொருட்களை கேரள மாநிலத்திற்கு சனியன்று முதற்கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வாகனத்தை சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் அருணகிரிநாதன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேனுகோபால், செயலாளர் ஏ.எம்.ரபீக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதேபோல், கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் கேரள மாநில மக்களுக்கான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி, மருந்துகள், போர்வைகள், பால் பொருட்கள் உள்ளிட்டவைகள் சேகரிக்கப்பட்டு முதற்கட்டமாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பாக ரூ.35 ஆயிரம் பணம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனை கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கல்பட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 20 லாரிகள் மூலம் சனியன்று தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், காவல் ஆணையர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் குருடம்பாளையம் கிளையின் சார்பில் ரூ.27ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாலக்காடு மாவட்ட மார்க்சிஸ்ட்
கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், நற்பணி மன்றங்கள், ரசிகர் மன்றங்கள் கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோவை மெயின் தொலைபேசி நிலையம், கோவை சிடிஓ பகுதிகளில் நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. இதில் ரூ. 24,970 அதிகாரிகளும், ஊழியர்களும் நன்கொடை வழங்கினார்கள்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு குழு ஜாகீர் ரெட்டிப்பட்டி கிளை சார்பில் ஜி.அழகேசன் தலைமையில் வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சேலம் டோல்கேட் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அங்கு வரும் வண்டிகளின் கண்ணாடியை துடைத்து வெள்ள நிவாரண நிதி வசூலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்மனூர், மெய்யனூர் கிளை சார்பில் முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும் சேலம் உருக்காலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிவாரண வசூல் இயக்கம் நடைபெற்றது. இதேபோல், நங்கவள்ளி ஒன்றிய கமிட்டி சார்பில் ஜலகண்டாபுரத்தில் உண்டியல் வசூல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, பி.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல் தவனையாக 1,520 கிலோ அரிசி, ரூ.2,860 வசூல் செய்யப்பட்டு மாவட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஞாயிறன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேரளா மாநில வயநாட்டு மாவட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பால் பவுடர் மற்றும் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனுப்பி வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: