திருவனந்தபுரம்,
“கேரள மாநிலம் கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்க ணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியாவிலுள்ள நம் சகோதரர்களுக்கு உதவ மறந்து விடாதீர்கள்” இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருப்பவர் துபாய் மன்னரும் ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமருமான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும். அரேபிய மொழியிலும், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் டுவிட் செய்துள்ள அவர், “கேரளாவுக்கு உதவுவது எங்களது பொறுப்பு. நம் வெற்றிக்கதைகளில் கேரள மக்கள்எப்போதும் இருந்திருக்கிறார்கள். அதன்படி, கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், ஆதரவளிப்பதற்குமான பொறுப்பு ஐக்கிய அரபு நாடுகளின் மக்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு நாடுகளும் இந்தியச் சமூகமும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும். அதன்படி மக்களுக்கு உதவ உடனடியாக ஒரு குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த முயற்சியில் ஒவ்வொருவரும் தாராளமாக பங்களிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குழு எமிரேட்ஸ் ரெட் கிரெசண்ட் தலைமையில், ஐக்கிய அரபு நாடுகளின் மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிகமான மலையாள மக்கள் வசிக்கும் மற்றொரு வளைகுடா நாடான ஓமனும் கேரளாவுக்கு உதவியுள்ளது. ராயல் ஓமன் விமானப்படை மூலம் மஸ்கட் நகரிலிருந்து திருவனந்தபுரத்துக்குச் சிறப்பு விமானம் இயக்க ஓமன் சுல்தான் கபூஸ் பின் சயித் அல் சயித்ஆணையிட்டுள்ளார். அதில்,அத்தியாவசியப் பொருட்களான குடிநீர் மற்றும் உணவு உட்பட நிவாரணத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மலையாள மொழி பேசுபவர்கள் வெள்ளநிவாரண பணிகளுக்குத் தேவையான பொருட்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துபாயைச் சேர்ந்த ஆஸ்டர் டிஎம்ஹெல்த்கேர் சார்பில் 200க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவினர் கேரளா வரவுள்ளனர். கேரள முதல்வர் பினராயிவிஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்களது அக்கறை மற்றும் பெரியஇதயத்துக்கு நன்றி. எங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நீங்கள் அளித்துள்ள இந்த உதவியைக் கேரள மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். உங்களது உதவி நீங்கள் கேரளாவின் உண்மையான நண்பன் என்பதைக் காட்டுகிறது” என ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்துமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.