திருப்பூர்,
காங்கயம் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காங்கயம் வட்ட முதல் மாநாடு ஞாயிறன்று முத்தூரில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிஐடியு நிர்வாகி ஏ.நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய, துரைசாமி வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யூ.கே.சிவஞானம் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்தூர் ரவிக்குமார், தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் வட்டச் செயலாளர் திருவேங்கடசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இம்மாநாட்டில் காங்கயம் வட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவராக எம்.பழனிசாமி, துணைத் தலைவர்களாக சுப்பிரமணி, நடராஜ், செயலாளராக செல்லமுத்து, துணைச் செயலாளர்களாக குமார், அர்ஜூனன், பொருளாளராக துரைசாமி ஆகியோர் உள்பட 19 பேர் கொண்ட வட்டாரக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்
காங்கயம் வட்டாரத்தில் தலித் மக்களுக்கு திருமண மண்டபங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு ஆசிரியப்பணி தர மறுக்கும் போக்கு உள்ளது. இதைக் களைந்து அவர்களுக்கும் தகுதி உடைய ஆசிரியர் பணி வழங்க வேண்டும். ஊதியூர், தாயம்பாளையம், பரஞ்சேர்வழி முடிதிருத்தகங்களில் தலித் சமூகத்தினருக்கு முடி திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழையகோட்டை, குட்டப்பாளையம், மதுக்காடையூர் ஆகிய பகுதிகளில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 800 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கே வழங்க வேண்டும், இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். கோட்ட அளவில் விழிக்கன் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டச் செயலாளர் ச. நந்தகோபால், வழக்கறிஞர் ந. நவீன் ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் நிறைவுரை ஆற்றினார். கரைப்பாளையம் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.