குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை மையமாக வைத்து ‘பொய் விதிகள்’ என்ற ஒரு கதையை எழுதியிருந்தீர்கள். இதே பிரச்சனையை மையமாகக் கொண்டு ‘நல்லா தான் இருக்கிறேன்’ என்று ஒரு பிரபலமான கவிதையையும் எழுதி இருக்கிறீர்கள். இவை உங்கள் வாழ்க்கை அனுபவப் பதிவுகளா?

எனது பதினோரு வயதிலிருந்து பதிமூன்று வயதுவரை என்னைக் கொண்டு போய் , தொழில் கற்றுக் கொள்வதற்காக ஒரு மளிகைக்கடையில் விட்டார்கள். சித்தப்பா மகனும் அங்கு இருந்தான். நான் அங்கு பட்ட அவதிகளையும் அங்கிருந்து தப்பித்ததையும்தான் ‘ பொய் விதிகள்’ கதையாக எழுதியிருக்கிறேன். அது என் சொந்த அனுபவம்தான் . அதேபோல , ஓட்டலில் எச்சில் துடைக்கிற பையனாக பணி செய்த ஒரு பையனைப் பற்றியதுதான் ‘ நல்லாதான் இருக்கிறேன் ‘ கவிதை. (சிறிது யோசனைக்குப் பிறகு) நான்கடையில் வேலை செய்த காலத்தில், படிக்க வேண்டும் என்கிற ஆவலில், என்கடை முதலாளி கண்டபடி அடிப்பதாகவும், கெட்ட வார்த்தையில் திட்டுவதாகவும் கற்பனையாக, பொய்யாக வாரம் ஒரு கடிதம் எழுதினேன். அதனால் என்னை வீட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டார் அப்பா. அந்தக் கடிதங்களில் இருந்த கற்பனையும், கதைஜோடிப்பும் பின்னர் கதை எழுத எனக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.

அப்பாவைப் பற்றி நிறைய கதைகளில் எழுதி இருக்கிறீர்கள். அவை உங்கள் அப்பாவைப் பற்றிய நிஜ பாதிப்புகளா…..?
அப்பா ! எல்லாரையும் போல அவர்தான் என்றைக்கும் எனக்கு `ஹீரோ, அவரைப் போல நான் இன்னும் ஆகவில்லை என்றே நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஒரு கதை ‘ தராசு’, பத்து வருடங்களுக்கு முன் தினமணிக்கதிரில் வெளிவந்தது . அவர் சைவர் . எல்லாத்திலும் அவர்தராசுதான். எப்பவும் கதர் சட்டை தான். காந்தி போல உப்பு இல்லாத சைவ சாப்பாடு. நாங்களும் அப்படித்தான் சாப்பிட வேண்டும்.’ கொல்லாமை ‘ பற்றி உள்ளூர் வாத்தியாருக்கு இவர் பாடம் எடுப்பார். அப்படிப்பட்டவர் தன் மனைவியை மட்டும் அசைவமாக இருக்க அனுமதித்தார். தன் பெண்டாட்டிக்காக மீனைப் பிடித்துக் கொன்று போடுவார். அதுதான் ‘ தராசு’ கதை. அவருடைய இன்னொரு செயலே ‘அப்பாவும் மகனும்’ கதை. ‘தீராநதி’ யில் வெளிவந்தது .

‘துண்டு’ ‘சாசனம்’ போன்ற சில கதைகளில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின்வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறீர்களே……?
என் தாத்தா காலத்தில் எங்கள் வீட்டு வாசலில் தலித் மக்களுக்கு நேர்ந்த அவமானங்களை நான் அறிவேன். அதற்கு, சிறுபிள்ளையாய் இருந்தபோது நானே சாட்சியாய் இருந்தேன். பின் , பொதுவுடமை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டபோது அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களுக்கு எதிர்மறையான கருத்துகளை என் அனுபவங்களினூடே சிறுகதைகளாக எழுதினேன்.

உங்களின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘ சீவன் ‘ . அந்தக் கதையைக் கூட அறிவொளி இயக்கத்தில் சிறு நூலாக வெளியிட்டு பல்லாயிரம் பிரதிகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அந்தக் கதையை நாத்திகப் பிரச்சாரம் செய்வது போல எழுதியிருந்தீர்களே…..?
எங்க ஊர் முனியசாமி கதை அது. இப்போதும் முனியசாமி கையில் அரிவாளோடு துடியான தெய்வமாக எங்க ஊர் மக்களுக்கும், பக்கத்து ஊர் மக்களுக்கும் காட்சியளித்தும் , பூசை , பலி முதலியவற்றை பெற்றுக் கொண்டும் இருக்கிறார். என் கதையில் மட்டுமே அவர் உடைபட்டு தூள் தூளாகக் கிடந்தார். கர்ணபரம்பரைக் கதைகள் குறித்த ஒன்றை எடுத்துப் போட்டு உடைக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். எங்களூர் துடியான தெய்வத்தையே தூக்கிப் போட்டு உடைத்தேன் . இந்தக் கதையை ‘ அன்னம் விடு தூது ‘இதழில் வெளியிடுவதற்காக கவிஞர் மீராவுக்கு அனுப்பினேன். அவர் படித்து முடித்ததும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘கந்தர்வன், பெரியார் இல்லை. இருந்திருந்தால் ரயில் ஏறி இந்தக் கதையை அவர் கையில் கொடுத்து விட்டு வந்திருப்பேன்’ என்று.

உங்களின் ‘ கொம்பன் கதை’, கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது . அந்தக் கதையைப் பற்றி …..
எனது எட்டு, ஒன்பது வயதில் நான் ஐந்து மைல் நடக்க முடியாமல் நடந்து போய் மந்தை மாடுகளைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பசுக்களில் யாரும் பால் கறக்க முடியாது . எந்த மாட்டையும் அதட்டி பத்திவிட முடியாது. கொம்புகள் அவற்றிற்குக் கைகளும் ஆயுதங்களுமாக இருந்தன . மந்தையில் மாடு பிடிப்பதை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு வில்போல் வளைந்து குதிக்கும். அதுதான் துள்ளல். களியாட்டம் போடும். மேடு, பள்ளம், கண்ட இடமெல்லாம் குத்தும். அப்படிப்பட்ட மாடுகள் தேர்வு செய்யப்பட்டு, பிடிக்கப்பட்டு வீட்டு மாடுகளாக்கப்பட்டபோது அவற்றிற்கு நிகழ்ந்தவை அனைத்தும் வன்கொடுமைகளே. இது , துள்ளித் திரிந்த ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தில் வேலைக்குப்போய் காயடிக்கப்பட்டு உணர்வு மடிக்கப்படுவதை எனக்கு நினைவூட்டியது. எட்டு வயதில் பார்த்ததை 50 வயதில் என் அனுபவங்களோடு சேர்த்து எழுதினேன். கதை நன்றாய் அமைந்துவிட்டதாகப் பலரும் சொன்னார்கள். பல தொகுப்புகளிலும் சேர்த்திருக்கிறார்கள்.

(புதிய புத்தகம் பேசுது-மே 2004 இதழுக்காக நேர்காணல் செய்தவர் சூரியசந்திரன்)

Leave a Reply

You must be logged in to post a comment.