இந்திய விவசாயிகளின் கையிருப்பில் இருக்கும் நிலங்களின் சராசரி அளவு குறைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகியுள்ளன. வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியான நபார்டு, இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டுக்கான இந்த ஆய்வில் இந்திய விவசாயிகளிடம் கையிருப்பில் உள்ள சராசரி நிலத்தின் அளவு 1.1 ஹெக்டேராகக் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகளிடம் கையிருப்பில் இருந்த சராசரி நிலத்தின் அளவு 1.16 ஹெக்டேராக இருந்தது. மேலும், இப்போது மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளிடம் 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக நபார்டு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

37 சதவிகிதம் அளவிலான விவசாயக் குடும்பங்களிடம் 0.4 ஹெக்டேருக்குக் குறைவான நிலமும், 30 சதவிகிதத்தினரிடம் 0.41 ஹெக்டேர் முதல் 1 ஹெக்டேர் வரையிலான நிலமும் இருக்கிறது. அதேபோல, 13 சதவிகித விவசாயிகளிடம் மட்டுமே 2 ஹெக்டேருக்கு அதிகமான விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்களைப் பொறுத்தவரையில், 5.2 சதவிகிதவிவசாயக் குடும்பத்திடம் மட்டுமே டிராக்டர் இருக்கிறது. 1.8 சதவிகித விவசாயிகளிடம் பவர்டிரில்லர் கருவிகளும், நீர்ப் பாசன வசதிக்கான கருவிகள் 1.6 சதவிகிதத்தினரிடமும், நீர்தெளிப்பான் கருவிகள் 0.8 சதவிகிதத்தினரிடமும் மட்டுமே இருக்கின்றன.தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பாக டெல்டா பகுதியில் 27 சதவீதம் விவசாய நிலங்கள் குறைந்துள்ளன.இதன் விளைவாக உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயநிலங்கள், விவசாய அல்லாத நோக்கங்களுக்காக திருப்பி விடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மிக எளிதானது. விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாற்றப்பட்டிருப்பதுதான். இப்போதும் கூட கொஞ்சம் நஞ்சம் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் ஒவ்வொரு நாளும் நொந்துநொந்து விவசாயத்திலிருந்து வெளியேறி விடும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளம் போகிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. ஆனால் இன்னும் தண்ணீர் கடைமடையை எட்டவில்லை. தஞ்சை மாவட்டத்திலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் கடைமடை விவசாயிகள் தண்ணீர் கேட்டு போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வரத்து கால்வாய்கள் இருந்தும் உரிய நேரத்தில் தூர் வாராமல், நீர்நிலைகளை ஆழப்படுத்தாமல், அதற்காக ஒதுக்கிய நிதியையெல்லாம் ஆளும் கட்சியினர் ஆளுக்கொரு பக்கம் சுருட்டிக் கொண்டு சென்றதால் தண்ணீர் விவசாய பூமியை அடைய மறுக்கிறது. கடலில் தஞ்சமடைகிறது. தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறது கடைமடை. வெள்ளம் பாய்ந்தும் போராட வேண்டிய நிர்ப்பந்தம். அதிமுக அரசை வீழ்த்தட்டும் இந்த கொதிப்பு.

Leave a Reply

You must be logged in to post a comment.