திருப்பூர்,
தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருப்பூர் மாநகரப்பகுதியில் போதுமான பாதுகாப்பு உபகரணம் இல்லாமல், துப்புரவு பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. உள்ளாட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மனித கழிவு உள்ளிட்ட ஆபத்து மிகுந்த பகுதிகளில் உள்ள கழிவுகள் அகற்றப்படும்போது மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது. இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. ஆனால்,திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கையுறை,காலணிகள்,ரிப்ளக்டர் ஜாக்கெட், முககவசம் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல்,வெறும் கை,வெறும் கால்களுடன் கழிவுகள் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர துப்புரவுத்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால்,தற்காலிகமாக நியமிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் சுய உதவி குழுவினர் துப்புரவு பணி மேற்கொள்ளும்போது,பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில், நிரந்தர துப்புரவு பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் பயன்படுத்துவதில்லை. துப்புரவு பணியை மேற்பார்வையிடும் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ஆபத்து மிகுந்த துப்புரவு பணிகளில், பாதுகாப்பு இல்லாமல், கடும் துர்நாற்றத்துடன் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இத்தொழிலாளர்களுக்கு நோய் தாக்குதல் உட்பட கடும் ஆபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவு அகற்றும் பணி குறித்து தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் உள்ளாட்சி அமைப்புமற்றும் அரசு அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பற்ற முறையில் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.எனவே, நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் நடத்தப்பட வேண்டும். மேலும், தற்காலிக தொழிலாளர்களுக்கும் உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.