கோயம்புத்தூர்,
வரலாறு காணாத மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் தமிழகத்தின் அனைத்து கல்வி நிலைய வாயில்களிலும் நிவாரண நிதிவசூல் இயக்கத்தில் ஈடுபடுமாறு மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு அழைப்புவிடுத்துள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 25 ஆவது வெள்ளி விழா மாநாடு கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 18-19 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பாக ரூ.57 ஆயிரத்தை அரங்கிலேயே வசூலித்து, அகில இந்திய தலைவர் வி.பி.ஷானுவிடம் அளித்தனர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் வீ.மாரியப்பன், தமிழகத்தின் அனைத்து கல்வி நிலைய வாயில்களிலும் கேரள வெள்ளநிவாரண நிதி திரட்டும் இயக்கத்தை நடத்திடுமாறு அறைகூவல் விடுத்தார். முன்னதாக மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, வி.பி.ஷானு ஆகியோர் உரையாற்றினர்.

ஞாயிறன்று நடைபெற்ற மாநாட்டை வாழ்த்தி ஆசிரியர் சங்க தலைவர்கள் உரையாற்றினர். மூட்டா சங்க பொதுச்செயலாளர் பேரா.நாகராஜன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கழகம் மாநில தலைவர் டி.வீரமணி, அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மா.சேகர் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். முன்னதாக மாணவர் வழிகாட்டி என்கிற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில் கல்வி உதவிதொகை குறித்த வழிகாட்டுதல், ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட மாணவர்களுக்கான வழிகாட்டுதலுக்காக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விக்ரம்சிங் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் அரசு பள்ளிகளை பாதுகாக்க போதிய நிதி ஒதுக்கீடு, ஆசிரியர் பற்றாக்குறையை போக்க காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விக்ரம்சிங் நிறைவுரையற்றினார்.

புதிய நிர்வாகிகள்:
மாநாட்டில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக ஏ.டி. கண்ணன், மாநில செயலாளராக வீ.மாரியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில துணைத் தலைவர்களாக ம.கண்ணன், நிருபன் சக்கரவர்த்தி, நாகை மாரியப்பன், கேப்டன் பிரபாகரன், தேன்மொழி, இசக்கி நாகராஜ் ஆகியோரும் மாநில துணைச்செயலாளர்களாக பிரகாஷ், செல்வராஜ், ஜான்சிராணி, பொன்மதி, திலீபன், அரவிந்தசாமி ஆகியோர் உள்ளிட்ட 27 மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 83 பேர் கொண்ட மாநிலக்குழு மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், கேப்டன் பிரபாகரன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: