புதுதில்லி;
ஜிஎஸ்டி வரி விதிப்பானது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விட, சரக்கு மற்றும் சேவை வரியால்தான் (ஜிஎஸ்டி) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக, மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்க நடவடிக்கைகள், பல்வேறு வகைகளில் தொழிற்துறையினரை பாதித்துள்ளது.
பண மதிப்பு நீக்கத்திற்கு முன்பாகவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவிகள் குறைந்து வந்த நிலையில், பண மதிப்பு நீக்கம் கடனுதவிகளை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டி அமலான பிறகு அது இன்னும் மோசமாகி, தொழில் நடத்தவே முடியாத சூழலுக்கு பலரைத் தள்ளியது.ஜிஎஸ்டி மூலம், சிறு நிறுவனங்களுக்கு கடனுதவி கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதியளித்ததும் நடக்கவில்லை. மாறாக, அது எதிர்மறை விளைவுகளே அரங்கேறின. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான கடனுதவி 8.5 சதவிகிதம் என்ற அளவிலேயே அதிகரித்தது. இது 2015ஆம் ஆண்டின் அளவை விட மிகவும் குறைவாகும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில், நகை – ரத்தினங்கள், ஜவுளி, கார்பெட், தோல், கைவினைப் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிப் பிரிவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இத்துறை ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளையே பெருமளவில் சார்ந்திருக்கின்றன. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு இத்துறையை மோசமாக பாதித்துள்ளன. இது தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.‘சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) பல்வேறு தாக்கங்களால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு, பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பிறகு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகும். குறிப்பாக, ஜிஎஸ்டி ரீபண்ட் கிடைப்பதில் உள்ள சிக்கல், உள்ளீட்டு வரிக் கடன்கள் போன்றவை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையைப் பெரிதும் பாதித்துள்ளன. எனவே, இந்த நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றன’ என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: