திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தில் ஏற்பட் டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள அம்மாநிலத்திற்கு ரூ.500 கோடிக்கான நிவாரண உதவியை பிரதமர் அறிவித்துள்ளார். முதல்வர் பினராயி விஜயன் – பிரதமர் மோடி சந்திப்புக்கு பிறகே இடைக்கால உதவியாக இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி அவசர உதவியாக ரூ. 2 ஆயிரம் கோடியை முதல்வர் கோரியிருந்த நிலையில் இத்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மதிப்பீடுகளின்படி கேரளத்தில் 19 ஆயிரத்து 512 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்பட்டுள்ள இழப்புகளின் முழுமையான விவரம் பின்னரே தெரிய வரும் எனவும் பிரதமரிடம் முதல்வர் தெரிவித்தார்.மேலும், பெருவெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கினார். மே 29 முதல் தென்மேற்கு பருவமழைக்கும் நிலச்சரிவிலும் 357 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி பயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 26 ஆயிரம் வீடுகள் முழுமையாக அல்லது பகுதி
யளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 53 ஆயிரம்
மக்கள் 3026 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 46 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன. பொதுப்பணித்துறை சாலைகள் 16 ஆயிரம் கிலோ மீட்டரும், உள்ளூர் சாலைகள் 82 ஆயிரம் கிலோ மீட்டரும், 134 பாலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிக்கு கூடுதல் உதவி தேவை                                                                                                                            உடனடியாக மேலும் 20 ஹெலிகாப்டர்கள், மோட்டார் பொருத்தப் பட்ட 600 படகுகளுடன் 40 தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், 4 ராணுவபொறியியல் படை, 10 கப்பற்படையும் கூடுதலாக தேவையென பிரதமரிடம் பினராயி விஜயன் கோரிக்கை
விடுத்தார்.இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், காப்பீட்டுத்துறை சிறப்பு முகாம் நடத்தி இழப்பீடுகளை
வழங்க வேண்டும் என்றார். முன்னுரிமை அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண் டும். மத்திய அரசின் என்டிபிசி, பிஜிசிஐஎல் ஆகிய நிறுவனங்கள் மாநில அரசு மேற்கொள்ளும் மின்சீரமைப்பு பணிகளுக்கு உதவ வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டவும், நிழற் குடைகள் அமைக்கவும் உதவ வேண்டும் என்றார்.

மகாத்மா காந்திஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 5.5 கோடி ரூபாய் மனித நாட்க
ளுக்கு வேலை வழங்க 2018-19 க்கான பட்ஜெட் நிதியிலிருந்து வழங்கப் படும். நீர்பாசன திட்டங்களுக்கும், பயிர் இழப்புக்கும் தோட்டக்கலைத் துறை மூலம் உதவிகள் வழங்கப் படும் என்றார்.

ஹெலிகாப்டரில் பிரதமர் செல்ல முடியாத வானிலை
பிரதமர் மோடி வெள்ளப்பாதிப்பு களை பார்வையிட கொச்சி கப்பற் படை விமான தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக உடனடியாக திரும்பி தரையிறங்கியது. அங்கிருந்து பிரதமர் மோடி ஐஎன்எஸ் சஞ்சீவனி அருகில் உள்ள அரங்கில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்றார். அங்கு கவர்னர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன்,மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், கேரள வருவாய் துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கூடுதல் முதன்மை செயலாளர் மற்றும் நிவாரண ஆணையர் பி.எச்.குரியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.