புதுதில்லி:
இந்திய மூலதனச் சந்தைகளில், பங்கேற்பு நோட்டுக்களின் வழியாக முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீடுகளின் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது.

இந்திய மூலதனச் சந்தையில் ஜூலை மாத இறுதி வரையில், ரூ. 80 ஆயிரத்து 341 கோடி மட்டுமே பங்கேற்பு நோட்டுகள் வழியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவானதாகும்.‘இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு நோட்டுகள் வாயிலான முதலீடுகள், ஜூலை மாத இறுதிக் கணக்குப்படி, ரூ. 80 ஆயிரத்து 341 கோடியாகச் சரிந்துள்ளது. இது ஜூன் மாத இறுதியில் ரூ. 83 ஆயிரத்து 868 கோடியாக இருந்தது’ என்று ‘செபி’ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது ஒரே மாதத்தில், சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குறைந்துள்ளதாக அது கூறியுள்ளது.

ஆனால், மே மாத முதலீட்டு அளவை எடுத்துக்கொண்டால், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்கேற்பு நோட்டுக்கள் வாயிலான முதலீடுகள் குறைந்திருக்கின்றன. ஏனெனில் மே மாதத்தில் ரூ. 93 ஆயிரத்து 497 கோடி அளவிற்கான முதலீடுகள் வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச் சந்தையில் பதிவு செய்யாமலேயே நேரடியாக முதலீடு செய்வதற்கு ‘பங்கேற்பு நோட்டுகள்’ (P-notes) விநியோகம் செய்யப்படுகின்றன. அண்மையில், இந்த வகையிலான முதலீடுகளுக்குப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான ‘செபி’ கடுமையான விதிகளை விதித்ததே, தற்போது முதலீடுகள் குறையத் துவங்கியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: