சென்னை;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘தீக்கதிர்’ சந்தா சேர்ப்பு இயக்கம் ஆக.16 தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி விடுதலைப்போராட்ட வீரரும், தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என்.சங்கரய்யா, கட்சி அணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோள்:

மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் ஒரு மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம். இதை அமல்படுத்து வதற்காக அவ்வப்போது கட்சியின் அகில இந்திய மாநாடுகள் நடைமுறைக் கொள்கையை தீர்மானிக்கின்றன. அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாடு, இன்றைய சூழ்நிலை
களை கணக்கிலெடுத்து கட்சியின் அன்றாட நடைமுறைக் கொள்கையை வகுத்துள்ளது.
மத்திய பாஜக ஆட்சியின் பிற்போக்கான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையும், நாசகரமான வகுப்புவாத கொள்கைகளையும் ஒருசேர எதிர்த்து மக்களை திரட்டி போராடுவது என்று கட்சியின் அகில இந்திய மாநாடு முடிவு செய்துள்ளது. அதன்படி, கட்சியின் அகில இந்திய தலைமை,மக்களின் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று நடந்த விவசாயிகளின் அறப்போராட்டமும், செப்.5 ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள தொழிலாளர் விவசாயிகள் பேரணியும் அதற்கு உதாரணங்களாகும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் மத்திய பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசி தெளிவான கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.அவற்றை நம்முடைய தீக்கதிர் தமிழில், தமிழக கட்சித் தோழர்களுக்கும், மக்ளுக்கும் எடுத்துச் செல்கிறது. எனவே, இந்தியாவில் மக்கள் இயக்கம் வளர தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயக இயக்கம் முன்னேற வேண்டும்.அதற்கு இந்த அரசியல் கட்டுரைகளையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை, சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை பிரச்சனை போன்றவற்றில் கட்சியின் மாநிலத்தலைமை மகத்தான இயக்கங்களை நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த இயக்கங்களுக்கெல்லாம் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் மக்கள் இயக்கம், இடதுசாரி ஜனநாயக இயக்கம் வளர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் வளர்ச்சி இன்றியமையாததாகும்.
இந்தியாவிலும், தமிழகத்திலும் உழைக்கும் மக்கள் பல்வேறு அரங்கங்களில் நடத்தும் போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் முழுமையான ஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு செல்வது தீக்கதிர் பத்திரிகை ஒன்று தான். இந்த மக்கள் இயக்கங்கள் மாபெரும்
வளர்ச்சியடைவதன் மூலம்தான் தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயக இயக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலுவடையும்.

எனவே, கட்சியின் பத்திரிகையான தீக்கதிரின் விற்பனையை 40 ஆயிரம் பிரதி
கள் உயர்த்துவது என்று தூத்துக்குடியில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் முடிவு
செய்தபடி, இலக்கை அடைவதற்கு கட்சியினுடைய ஊழியர்களும், உறுப்பினர்களும், அனுதாபிகளும் ஒன்றுசேர்ந்து பெருமுயற்சி செய்ய வேண்டுமென்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தீக்கதிரின் வளர்ச்சி இடதுசாரி ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சியாகும். இடதுசாரி ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சி தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு அடிப்படையாகும். இதற்கு போர்க்கருவியாக உள்ள தீக்கதிர் பத்திரிகை யை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். தீக்கதிரை மக்கள் கூட்டம் கூட்டமாக வாசித்து அரசியல் பயில்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைத்து தோழர்களின் கடமையாகும் என்பதை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.