புதுதில்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்திலும், சுவாமி அக்னிவேஷ் மீது, பாஜக-வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஹரியானா மாநில முன்னாள் எம்எல்ஏ-வான அக்னிவேஷ், கடந்த ஜூலை மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, அவரை, பஜ்ரங் தள் மற்றும் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத் தாக்கி படுகாயப்படுத்தினர். இந்நிலையில், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் மீண்டும் அக்னிவேஷைத் தாக்கி தங்களின் காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

சுவாமி அக்னிவேஷ், பாஜக-வின் இந்துத்துவா அரசியலுக்கு எதிரானவர். மாட்டிறைச்சி உட்பட பல விஷயங்களில் இந்துத்துவ அமைப்புக்களை கடுமையாக சாடி வருபவர். இதன்காரணமாகவே, ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் என்ற இடத்தில் அக்னிவேஷ் மீது பாஜக-வினர் தாக்குதல் நடத்தினர். பாஜக-வுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களை தூண்டிவிடுவதாக கூறி இந்த தாக்குதலை அவர்கள் நடத்தினர். இதுதொடர்பாக, சுவாமி அக்னிவேஷ் புகார் கொடுத்து ஒருமாதத்திற்கு மேலாகியும் பாஜக-வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.எனினும், அதனையெல்லாம் மறந்துவிட்டு, பாஜக தலைவர் வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சுவாமி அக்னிவேஷ், தில்லி பாஜக அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்றபோது, அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கி கீழே தள்ளி உதைத்துள்ளனர். போலீசார் அக்னிவேஷை மீட்டு வேனுக்குள் ஏற்றிய நிலையில், அந்த வேன்மீதும் பாஜக-வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: