புதுதில்லி;
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியானது, நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் ஆபத்து உள்ளதாக ‘இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்’ தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. வளர்ச்சி மதிப்பீட்டையும் குறைந்த்துள்ளது.பிட்ச் குழுமத்தின் ஒரு அங்கமான, ‘சந்தை ஆய்வு மற்றும் மதிப்பீட்டு’ நிறுவனமான ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த தனது ஆய்வறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.4 சதவிகிதம் வளர்ச்சி காணும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் அண்மைக் காலமாகவே இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாகவும், பயிர் கொள்முதலுக்கான செலவுகள் உயர்வு, வாராக் கடன் பிரச்சனை உள்ளிட்ட காரணிகளும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக எழுந்துள்ளன என்றும் எச்சரித்துள்ளது.

‘இந்தியாவில் வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக அவற்றின் உற்பத்திச் செலவை விட 1.5 மடங்கு உயர்த்தி வழங்கும் அரசின் முடிவு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க விகிதம் அதிகரிப்பு ஆகியவை இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது; மேலும், உலகளவில் அதிகரித்து வரும் வர்த்தகப் பாதுகாப்புவாதக் கொள்கை சார்ந்த பிரச்சனைகளாலும் நிலைமை இன்னும் மோசமாகலாம்; வங்கித் துறையில் வாராக் கடன் பிரச்சனைகள் வளர்ச்சியை இன்னும் அதிகமாகவே பாதிக்கும்’ என்று இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 7.4 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாகவும் இந்தியா ரேட்டிங்ஸ் குறைத்துள்ளது.

கச்சா எண்ணெய்க்கான செலவும் உயரும்                                                                                                                        டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 32 காசுகள் என்ற அளவிற்கு மோசமடைந்து உள்ளதால், இது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவுகளையும் பன்மடங்கு அதிகரிக்கக் கூடும் அரசு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
“2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகள் 26 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதே இதற்குக் காரணமாகும்.இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகள் ரூ.7.02 லட்சம் கோடியாக (108 பில்லியன் டாலர்) இருக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்தது. அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 65 ஆக இருந்தது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 65 டாலராக இருந்தது. இப்போது ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால் நிதியாண்டு இறுதியில் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.