பிரதமர் மோடி செங்கோட்டையிலிருந்து ஆற்றியுள்ள சுதந்திர தின உரை கிட்டத்தட்ட தேர்தலுக்கு முன் நிகழ்த்தப்படும் உரையையே அதிக அளவில் ஒத்திருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு முன் செங்கோட்டையில் ஆற்றிய ஐந்தாவது மற்றும் கடைசி உரையை நிகழ்த்துகையில், மோடி 2014 லிருந்து தன்னுடைய அரசாங்கம் செய்துள்ள சாதனைகளைப் பட்டியலிடுவதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதற்கு அவர் 2013இல் பல்வேறு முனைகளிலிருந்த முன்னேற்றங்களுடன் இப்போதுள்ள நிலைமையை ஒப்பிட்டுக் கூறினார்.

‘நல்ல காலம் பிறக்குது’ என்ற உறுதிமொழியில் தொடங்கி, 2014இல் எல்லாருடனும், எல்லாருக்குமாகவும் என்கிற முழக்கத்தை எழுப்பியது வரை, மோடி தாக்கல் செய்திட்ட சாதனைப்பட்டியல், எந்தவிதத்திலும் எதார்த்த நிலைமைகளுடன் ஒத்துப்போகவில்லை. அது வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி, விவசாயிகள் கோரிக்கையான விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக இருந்தாலும் சரி, கிராமப்புற மின்மயமாக இருந்தாலும் சரி, கழிப்பிடங்கள் கட்டுதல் மற்றும் பெண்களுக்கான அதிகார வல்லமையை உயர்த்துவதாக இருந்தாலும் சரி, எது குறித்து மோடி பேசியதாக இருந்தாலும், வழக்கம்போல் அடுக்கி வைத்திருந்தவற்றிலிருந்து அவர் பேசிய பேச்சு முற்றிலும் உள்ளீடற்று வெறுமையாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

இவரது உரையின்போது கூறிய திட்டங்களில் ஒன்று, பிரதான மந்திரி ஜன ஆரோக்கியா இயக்கம் (Pradhanmantri Jan Aarogya Abhiyan) என்பதாகும். இது இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின்போது, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட, பாரத் ஆயுஷ்மேன் (நீண்ட ஆயுள் வாழ்பவன்) என்பதன் புதிய பெயர்தான். இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15இலிருந்து தொடங்குகிறது என்றும் தலா ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் என்கிற விதத்தில் பத்து கோடி குடும்பங்களை இத்திட்டத்தின்கீழ் கொண்டுவந்திடும் என்றும் மோடி அறிவித்தார். மோடி இதற்கு முன்பு மிகவும் பகட்டுடன் அறிவித்து பல திட்டங்களைப் போலவே இந்தத்திட்டத்திற்கும்  பட்ஜெட்டில் வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் அறிவித்துள்ளதுபடி நாட்டிலுள்ள ஐம்பது கோடி குடும்பங்களுக்கு பணம் ஒதுக்க வேண்டும் என்றால் குறைந்தது 50 ஆயிரம் கோடி  ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்.

மேலும், சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கி மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். ஆனால், இவர் அறிவித்துள்ள திட்டத்தின்படி ஒதுக்கப்படும் தொகைகளில் மிகப்பெரும் அளவு தனியார் மருத்துவமனைகளுக்காகும். காப்பீட்டின் அடிப்படையிலான திட்டம் என்பது தனியார் பங்குபெறுவதைச் சம்பந்தப்படுத்தி, அரசாங்கம் ஒதுக்கும் தொகை முழுவதும் தனியார் சுகாதாரப் பாதுகாப்புத் துறை வழியாகவே பாயும்.

தற்போது, பொது சுகாதார அமைப்புமுறையே நிதியில்லாமல் திண்டாடிக் கொண்டும் தள்ளாடிக்கொண்டும் இருக்கக் கூடிய சூழ்நிலையில்தான், இவ்வாறு பிரதமர் மோடி தேசியச் சுகாதாரப்பாதுகாப்புத் திட்டத்தினை அறிவித்திருக்கிறார். உண்மையில் 2018-19க்கான மத்திய பட்ஜெட்டில் சுகாதாரப் பட்ஜெட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை என்பது வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மோடி அறிவித்துள்ள “மோடிப் பாதுகாப்பு”  (“Modicare”) என்கிற திட்டமானது, கார்ப்பரேட் மற்றும் தனியார் மருத்துவ மனைகளைக் கொழுக்கச்செய்வதற்கே வழிவகுத்திடும் என்பதை மெய்ப்பிக்கப் போகிறது.

மேலும் மோடி, அரசாங்கத்தின் மானியங்களை வாங்கிக்கொண்டிருக்கிற 6 கோடி போலி பயனாளர்களை ஒழித்துக்கட்டப் போகிறோம் என்றும், இதன்மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் தன் உரையின்போது செருக்குடன் பீற்றிக்கொண்டுள்ளார். ஆதார்  அட்டையுடன் இணைக்கப்படாததால் ரேஷன் மறுக்கப்பட்ட ஏழைகள் மற்றும் அநாதைகள் குறித்து எதுவுமே இவர் கூறாமல் மறைத்துவிட்டார். என்னே கொடூர மனப்பான்மை! ஜார்கண்ட் மாநிலத்திலும் மற்றும் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ள பட்டினிச்சாவுகள் இவர் மனசாட்சியைக் கொஞ்சம்கூட குத்தவில்லை என்பதையே இவரது உரை காட்டுகிறது.

மோடி இப்போது பேசும்போதும் ஊழலை ஒழித்துக்கட்டுவோம் என்றும் கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டுவோம் என்றும் திரும்பவும் ஆரவாரத்துடன் பேசத் தயங்கிடவில்லை. இவ்வாறு பேசுவதென்பது இவருக்கு ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. ரபேல் விமான பேரமானது அரசாங்கத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கிற சமயத்திலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பானது முழுமையாகப் படுதோல்வி அடைந்துவிட்டது என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையிலும்கூட இவ்வாறு இவர் பீற்றிக்கொள்வதற்குத் தயங்கிடவில்லை.

குண்டர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு முஸ்லீம்களையும், தலித்துகளையும் மிகவும் கொடூரமான முறையில் கொன்றுவரும் சம்பவங்கள் சம்பந்தமாக, அதிலும் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் நாட்டையே உலுக்கிய சம்பவங்கள் தொடர்பாக, இவர் தன் உரையின் போது வாயே திறக்கவில்லை. இந்தக் காலம் முழுவதுமே, பிரதமர் மோடி, இத்தகைய குண்டர் கூட்டத்தின் வன்முறை வெறியாட்டங்களையும், கொலைகளையும் கண்டித்திட திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சென்ற ஆண்டு சுதந்திர தின உரையின்போது மோடி பேசும்போது, நம்பிக்கைகளின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக ஏதோ பேசியிருந்தார். ஆனால், இத்தகைய மேம்போக்கான கருத்து கூட இப்போதைய உரையில் இல்லை என்பது மட்டுமல்ல, முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது குறித்தும் அவர்கள் மத்தியில் ஒருவிதமான பாதுகாப்பின்மை மற்றும் அச்ச உணர்வு உருவாகியிருப்பது குறித்தும்கூட  எதுவுமே கூறாது ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

இவர் பேசாது அமைதி காத்த மற்றுமொரு முக்கியமான விஷயம், அயல்துறைக் கொள்கை மற்றும் அண்டை நாடுகளுடனான நம்முடைய உறவுகள் குறித்ததாகும். இந்தியா, அமெரிக்காவின் போர்த்தந்திரம் மற்றும் ராணுவக் கூட்டணியுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டதன் காரணமாக, தெற்காசியாவில் நம்முடைய அண்டை நாடுகளுடன் ஏற்பட்டுள்ள உறவுகளில் பிரச்சனைகள் அதிகரித்திருப்பது குறித்தெல்லாம் மோடி பேச விரும்பவில்லை என்பது தெளிவாகவேத் தெரிகிறது.

மேலும் அவருடைய உரையின்போது, தற்போது இருந்துவரும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், மாநிலங்களின் உரிமைகளைப் படிப்படியாக ஒழித்துக்கட்டிவருவது குறித்தும், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் கொண்டுவர மேற்கொண்டுள்ள முயற்சி குறித்தும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் தேர்வில் மூக்கை நுழைப்பது குறித்தும், மக்களுக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை கொண்டுவருவதற்காகச் சட்டம் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருப்பது குறித்தும்  எதுவுமே பேசாது தனக்கேயுரிய குணாம்சத்தின்படி தவிர்த்துவிட்டார்.

உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கு நேர்மாறாக உதட்டளவில் அரசமைப்புச் சட்டத்திற்குச் சேவை செய்வது என்பதைக் கடந்தகாலங்களில் அவர் எவ்வாறு செய்தாரோ அதேபோன்று இப்போதும் தன் சுதந்திர தின உரையை ஆற்றியுள்ளார்.

நாட்டின் நிலைமை மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கக்கூடிய சமயத்தில்தான் 72ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. 1947க்குப் பின் மதச்சார்பின்மை அடிப்படையில் அமைந்துள்ள நம்  நாட்டிற்கும்,  நாட்டின் குடியரசு அரசமைப்புச் சட்டத்திற்கும் இப்போது ஏற்பட்டுள்ளதுபோல் மிகப்பெரிய அளவிற்கு அச்சுறுத்தல் இதற்குமுன் எப்போதுமே ஏற்பட்டதில்லை.  கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சி, நம் மதச்சார்பற்ற அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சி செய்துகொண்டே, நம் நாட்டையும், நம் அரசமைப்புச் சட்டத்தையும் அரித்து வீழ்த்திட, முயற்சிகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு மிகவும் தெளிவான முறையில் நமக்கு எதிராக வந்துள்ள அபாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடத் தீர்மானிப்பதே இந்தச் சுதந்திரநாளில் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரே சபதமாகும். இதற்காக, அடுத்த ஆண்டு சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கும் பிரதமரை, ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவிலிருந்து வராத ஒருவராகத் தேர்ந்தெடுப்பதை உத்தரவாதப்படுத்துவது அவசியமும், அவசரமும், தவிர்க்க முடியாததுமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Leave A Reply

%d bloggers like this: