சேலம்,
மலைகிராமத்திற்கு பேருந்து வசதியை விரிவுப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி ஆத்தூர் போக்குவரத்து பணிமனையில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆடு, மாடுகளுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா பைத்தூர் ஊராட்சியில் உள்ள கல்லுகட்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு போதியபேருந்து வசதி செய்து தரப்படாததால் இங்கிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆத்தூர் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டு, பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எ.முருகேசன் தலைமையில் ஆத்தூர் பேருந்து பணிமனையில் ஆடு, மாடுகளுடன்குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஒரு மாத காலத்திற்குள் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாசலம், அழகு துரை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.