நாமக்கல்,
பள்ளிபாளையம் பகுதிகளில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் போதிய வசதிகளின்றி தவித்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் புகார் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில்காவிரி கரையோரம் அமைந்துள்ள குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இப்பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 446 குடும்பங்களைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள 16 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுசாமி, எஸ்.சுரேஷ், குமாரபாளையம் நகர செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இதில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தாங்கள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதியில்லாமல் பரிதவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் கூடுதல் முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகள் செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்தித்துமார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.