திருப்பூர்,
நொய்யல் ஆற்றில் சாய ஆலைகள் கழிவு நீரை திறந்து விடும் நிலையில், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டததிலுள்ள அணைப்பாளையத்திலுள்ள தரைப்பாலம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து. காலேஜ் ரோட்டிலிருந்து ஆண்டிப்பாளையம் செல்லக்கூடிய ரயில்வே பாலத்தின் பாதையை காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்துள்ளனர். இதன் காரணமாக ஆண்டிபாளையம், கல்லூரி சாலைக்கும் இடையில் பணி நிமித்தமாக செல்பவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேநேரம், அணைப்பாளையத்தில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

ஆற்றுக்குள் சாயக் கழிவுநீர் :
மழை வந்தால்தங்கள் ஆலைகளில்தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை சாய ஆலை அதிபர் ஆற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்ப சாயக்கழிவுகள் நுரையாக மாறி காற்றில் பறக்கிறது. இந்த நுரை பொதுமக்கள் மீது படுவதால் தோலில் அரிப்பு போன்ற ஓவ்வாமைகள் ஏற்படுகின்றது. அதுவும், நொய்யல் ஆறு கோவையில் துவங்கும்போது தண்ணீரில் எவ்வித கலப்பின்றி வருகிறது. ஆனால், திருப்பூர் வந்தால் மட்டும் நுரை ஏற்படுகிறது. இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளின் கவனத்திற்கு பொதுமக்கள் பலமுறை கொண்டு சென்றபோது கூட இதுதொடர்பாக எவ்வித உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ்வாறு சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்து விடும் சாய ஆலை அதிபர்களிடம் ஆதாயம் பெறுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இனியேனும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.