===ஜி.ராமகிருஷ்ணன்===                                                                                                                                                    நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிற மாபெரும் இயக்கம் இந்திய மாணவர் சங்கம். உலகின் இரண்டாவது பெரிய மாணவர் அமைப்பு இந்திய மாணவர் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மாபெரும் இயக்கத்தின் 25ஆவது வெள்ளிவிழா மாநில மாநாடு ஆகஸ்ட் 18 (இன்று) கோயம்புத்தூரில் துவங்குகிறது.

இதே கோயம்புத்தூர் மாநகரத்தில் 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக களப்பணியாற்றி வரும் தோழர்கள் பி.ஆர்.நடராஜன், அ.சவுந்தரராசன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தீக்கதிர் நாராயணன் தோழர்களோடு நானும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழக மாணவர்களை முற்போக்கு பாதையில் அணிதிரட்டுவது என அந்த மாநாடு சூளுரைத்தது. இன்றைக்கு துவங்கவுள்ள கோவை மாநில மாநாட்டை எண்ணிப் பார்க்கும் போது, முதன் முதலாக நடைபெற்ற அன்றைய கோவை மாநில மாநாடு நெஞ்சில் நிழலாடுகிறது.

தமிழ்நாடு மாணவர் சங்கம் போல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாக இயங்கிவந்த மாணவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1970ல் திருவனந்தபுரத்தில் கூடின. அங்கு இந்திய மாணவர் சங்கம் உதயமானது. இந்திய மாணவர் சங்கத்தின் முதலாவது தலைவராக தோழர் பாஸ்கரன், பொதுச் செயலாளராக தோழர் பிமன்பாசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தோழர் பாஸ்கரன் கேரளத்தைச் சேர்ந்தவர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த தோழர் பிமன்பாசு, இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக, மேற்குவங்க இடது முன்னணி தலைவராக செயலாற்றி வருகிறார்.

1968ல் துவங்கி கடந்த 50 ஆண்டுகாலமாக இந்தியாவில் முற்போக்கான கல்விக் கொள்கைக்காக; அனைவருக்கும் கல்வி- அனைவருக்கும் வேலை என்ற லட்சியத்திற்காக சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் எனும் பதாகையை உயர்த்தி எண்ணற்ற போராட்டக் களங்கள் கண்ட மாபெரும் இயக்கமாக இந்திய மாணவர் சங்கம் வளர்ந்திருக்கிறது.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் கொண்டாடி இரண்டு நாட்கள் கழித்து, இத்தகைய பெருமைகள் கொண்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவையில் துவங்கவிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் என்ற பேரியக்கம் உதயமாகி, நாட்டின் சுதந்திரத்திற்காக அன்றைக்கு பெரும் போராட்டங்களில் பங்கேற்று சிறைசென்ற மாணவர் தலைவர்கள் – இன்றைக்கும் நம்மோடு அந்த தியாகத்தின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் என். சங்கரய்யா போன்ற மகத்தான மாணவர் தலைவர்களது வாரிசுகளாக – தேசத்தின் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் இயக்கமாக இந்திய மாணவர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இந்திய கல்வி மிகக் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறது. கல்வி வணிகமயம், மதவெறிமயம், மத்தியமயம்- என்ற இந்த மூன்று ‘மயங்கள்’ கல்விக்கெதிராக மத்திய அரசால் ஏவப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த கல்வியும் முற்றாக தனியார் வசம் ஒப்படைக்கப்படும் பேராபத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாடப்புத்தகங்கள் மதவெறி நோக்கத்துடன் மாற்றி அமைக்கப்படுகின்றன. வரலாறு திரிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தீவிரமாக அமலாக்கும் நோக்கத்துடன் மாநில பாடத்திட்டங்கள் – மாநில கல்வி வாரியங்கள் – மாநில அரசுகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வியை – கல்வி நிலையங்களை மத்திய அரசு முற்றாக அழிப்பது அல்லது தன்வயப்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதிதான் தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நீட்தேர்வு. இதன் ஒரு பகுதிதான், பல்கலைக்கழக மானியக்குழு முற்றாக கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற பெயரில் கல்வியை முழுமையான வணிகமயமாக்கும் முயற்சி.

மறுபுறத்தில் கல்விக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் மறுக்கின்றன. தமிழகத்தில் அதிமுக அரசு, மத்திய அரசின் கல்விக்கொள்கையை அப்படியே அமல்படுத்த முனைகிறது. அரசுப்பள்ளிகளை நிர்மூலமாக்கி அவற்றை மூட முயற்சிக்கிறது.
இத்தகைய பின்னணியில் கல்வி தனியார்மயத்தை எதிர்த்து, கல்வியில் மதவெறியை புகுத்துவதை எதிர்த்து, தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை பாதுகாத்திட, சமச்சீரான கல்வியை அனைவருக்கும் உறுதி செய்திட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு இலவசக் கல்வியை உறுதி செய்திட, அனைவருக்கும் கட்டாய இலவச ஆரம்பக்கல்வியை உறுதி செய்திட – 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கூடிய மாணவர்கள் எழுப்பிய படிப்போம் போராடுவோம் என்ற அதே முழக்கத்தை இன்றும் தமிழக கல்வி நிலையங்கள் தோறும் முழங்கி முன்னேறுகிறது இந்திய மாணவர் சங்கம்.

அத்தகைய மாணவர் சங்கத்தின் கோவை மாநில மாநாடு வெல்லட்டும் என வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.