திருப்பூர்,
தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வரும் திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையலரான பாப்பாள் பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைத்து தருவதற்குஅப்பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்து தகறாரில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து தகறாரில் ஈடுபட்ட ஆதிக்க சாதியை சேர்ந்த 87 பேர் மீது வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பாப்பாள் சமைத்த உணவில் பல்லி இருந்ததாக ஆதிக்க சாதியினர் மீண்டும் சர்ச்சையை கிளப்பினர். இதையடுத்து, பாப்பாள் சமைத்த உணவின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளித் தலைமையாசிரியர் சசிகலா கொடுத்த புகாரின் பேரில், சமையலர் பாப்பாள் மற்றும் உதவியாளர் மீது கவனக்குறைவாக உணவு சமைத்ததாக சேவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்தும், தன் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்பாள் புகார் அளித்தார். இத்தகைய அடுத்தடுத்த சர்ச்சைகளை தொடர்ந்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று இருதரப்பினரிடையே சார் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச சூழலை போக்கும் வகையிலும் அவர்களுக்கு உளவியல் மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்குவது எனகூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இதனடிப்படையில் வியாழனன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அவிநாசி அரசு மருத்துவர் ஜெயந்தி உளவியல் ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனையில் சக மாணவ, மாணவியர்களிடம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், பள்ளியிலும் அனைவரிடமும் ஒழுங்கு முறையை கடைபிடிக்க வேண்டும். உடல் தூய்மை மட்டுமல்லாது உள்ளத்தூய்மையுடன் அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: