உடுமலை,
அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு 16ம் தேதி நிரம்பியது. இதனால் அணையின் நீர்மட்டம் 86 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் 9 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் 2வது முறையாக மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் இரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேற்கு தொடர்ச்சி பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதியான தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் புதனன்று காலை 9 ஆயிரம் கன அடி நீரும் வந்தது. இதனால் அணை நீர்மட்டம் 88.09 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து 9 கண் மதகுகள் வழியாக உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கடந்த 30 நாட்களில் 3வது முறையாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், பாசனத்துக்காக கால்வாய் மற்றும் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களிலும் சேர்த்து 12,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தாராபுரம்
அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியான மறையூரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பழைய பாலத்தில் இருகரைகளையும் தொட்டு செல்கிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றுக்குள் செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் திடீரென தண்ணீர் அதிகரிப்பால் கரையோரங்களில் தண்ணீர் உறிஞ்ச வைத்திருந்த மோட்டார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை சார்பில் கரையை ஒட்டியுள்ள 64 கிராமங்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் 24 மணிநேரமும் கணிகாணிப்பில் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.