புதுதில்லி:
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியடையும் என்று கருத்துக் கணிப்புக்களில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 2018 இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சி ஓட்டர் மற்றும் ஏபிபி செய்தி ஊடகம் இணைந்து தேர்தல் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அதில், மூன்று மாநிலத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடையும் என தெரியவந்துள்ளது. சத்தீஸ்கரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 38.8 சதவிகித வாக்குகளுடன் 33 தொகுதிகளை மட்டுமே பெற்று தோல்வியடையும் என கூறப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் 40 சதவிகித வாக்குகளுடன் 54 தொகுதிகளை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு, காங்கிரஸ் கட்சி 41.7 சதவிகித வாக்குகளுடன் 117 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறும் ஆய்வு, பாஜக-வைப் பொறுத்தவரை 40.1 சதவிகித வாக்குகளுடன் 106 தொகுதிகளை மட்டுமே வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதேபோல ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 37 சதவிகித வாக்குகளும் காங்கிரஸூக்கு 51 சதவிகித வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பாஜக 57 தொகுதிகளிலும் காங்கிரஸ் 130 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் இந்த கணிப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.