புதுதில்லி:
விநாயகர் சதுர்த்தி விழாவில், தாங்களே குண்டுகளை வெடிக்கச் செய்து, பழியை இஸ்லாமியர்கள் மீது போடுவதற்குத் திட்டம் தீட்டியதாக, மகாராஷ்டிராவில் பிடிபட்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.கோவா-வைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதர் மௌசோ-வை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பால்கர் நகரம். இங்கு பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, வைபவ் ரவுத் என்பவரின் இல்லத்திலும், அவருக்குச் சொந்தமான கடைகளிலும் வெடிகுண்டுகள், நாட்டுத் துப்பாக்கிகள், வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
வைபவ் ரவுத்தின் மும்பை வீட்டிலிருந்து 22 பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளும், இவரது கூட்டாளியான கைலாஸ்கரின் வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்ற தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இதனடிப்படையில், வைபவ் ரவுத், சுதானவ் காந்தலேகர் மற்றும் சரத் கைலாஸ்கர் ஆகியோரை, பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடம் தொடர் விசாரணையும் நடத்தி வந்தனர்.

வைபவ் ரவுத், ‘சனதன் சன்ஸ்தான்’ என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் என்று முதலில் கூறப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், ரவுத் தங்கள் அமைப்பில் இல்லை என்று ‘சனதன் சன்ஸ்தான்’ தப்பித்துக் கொண்டது. மேலும், ‘இந்து கோவன்ஷ் ரக்‌ஷா சமித்’ என்ற அமைப்பில்தான் ரவுத் உறுப்பினர் என்றும் ‘சனதன் சன்ஸ்தான்’ கூறியது.
ஆனால், எந்த அமைப்பு என்ற அவசியம் இல்லை; அவர் ஒரு இந்துத்துவ ஆதரவாளர் என்பதே பெருமைக்குரியதுதான் என்று ரவுத்தின் வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர் பகிரங்கமாக தெரிவித்தார்.இதேபோல சுதானவ் காந்தலேகர், சாம்பாஜி பீடேயின் சிவப்ரடிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் என கூறப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளாக சுதானவ் தங்களுடன் தொடர்பில் இல்லை என்று சிவப்ரடிஸ்தான் கூறிவிட்டது.இதனிடையே விசாரணையில், வைபவ் ரவுத் உள்ளிட்ட 3 பேரும் பல அதிர்ச்சிதரும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளனர். அதாவது, வைபவ், சுதானவ், சரத் ஆகிய மூவரும் சேர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள 6 திரையரங்குகளையும், 4 பிள்ளையார் கோயில் மண்டபங்களையும் வெடிகுண்டு வைத்து தகர்த்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த திரையரங்குகள், பிள்ளையார் கோயில்களுக்கு அருகில் இஸ்லாமியர்களே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர் என்பதால், குண்டுவெடிப்புப் பழியை, அவர்கள் மீது சுமத்தி, வன்முறையை அரங்கேற்றும் சதி செய்திருந்ததையும் விரிவாக விளக்கியுள்ளனர்.
திரையரங்குகள், பிள்ளையார் கோயில்கள் குண்டுவைக்கும் இந்த திட்டத்தை விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத் நாட்களில் நடத்தவும் தீர்மானித்துள்ளனர். அப்போதுதான் பெரும் வன்முறையைத் தூண்ட முடியும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்துள்ளது.
இதற்கு அவர்கள், மும்பை, புனே, சங்லி மற்றும் சோலாப்பூர் நகரங்களைத்தான் இவர்கள் குண்டுவெடிப்புக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.குண்டுவைக்கும் திட்டம் மட்டுமல்லாது, கோவா-வைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் எழுத்தாளருமான தாமோதர் மௌசோ உள்ளிட்ட சிலரை படுகொலை செய்யவும் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கைதான 3 பேரும் கூறியுள்ளனர்.இதற்காக இவர்கள் பயிற்சியும் பெற்றதாக தெரியவந்துள்ளது. எனினும், பயிற்சி அளித்தவர்கள் யார், வேறு யாருக்கெல்லாம் சதித்திட்டத்தில் தொடர்பு இருக்கிறது? என்று பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: