திருப்பூர்,
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட கையெழுத்து இயக்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டத் தலைமை அலுவலகம் முன்பு புதனன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர் பலர் கலந்து கொண்டனர். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத பாரதிய ஜனதா கட்சிமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கார்ப்பரேட்முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை அமலாக்குவதுடன், பிளவுவாத அரசியலை நடத்தி மக்கள் ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே பாஜக அரசைவீழ்த்த வேண்டும் என தலைவர்கள் உரையாற்றினர்.

கையெழுத்து இயக்கம்:
இவ்விழாவின் தொடர்ச்சியாக அவிநாசி சாலை பேருந்து நிறுத்தம் அருகே, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பேருந்து நிறுத்தம் அருகிலேயே நீளமான வெண் துணி கட்டப்பட்டு, அதில் பொது மக்கள் கையெழுத்து இடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் முதல் கையெழுத்திட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக உரையாற்றினர். இந்த இயக்கத்தில் பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள், முதியோர் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் முன்வந்து கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.

ஊத்துக்குளி:
இதேபோல் சுதந்திர தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் பெண்கள் ,சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனித சங்கிலி இயக்கத்திற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி தலைமை தாங்கினார். பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பிரமிளா உரை ஆற்றினார். கேரளாவில் பெண்கள் பாதுகாப்பிற்காக மகளிர் காவலர்களை மட்டும் கொண்ட ரோந்து காவல்படை உள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான மற்றும் இணையதள குற்றங்களுக்காக காவல் துறையில் சைபர்கிரைம் என்ற துறை உள்ளது. ஆனால் சைபர் துறை என்பதாலோ அதன் செயல்பாடும் சைபர் அளவிலே உள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழாமல் இருக்க வேண்டுமானால் வெறும் சட்டத்தையும் தண்டனையையும் அதிகரித்தால் மட்டும் போதாது என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, தாலுகா குழு உறுப்பினர் கை.குழந்தைசாமி, மாதர் சங்க தாலுகா தலைவர் அம்புஜம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மனித சங்கிலி அமைத்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.