புதுதில்லி;
பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களில் முதலாவதும், முதன்முதலில் படுதோல்வி அடைந்ததும் ‘தூய்மை இந்தியா’ திட்டம்தான்.

ஆங்கிலத்தில் ‘கிளீன் இந்தியா’, இந்தியில் ‘சுவச் பாரத்’ என்று, நான்காண்டுகளாக, பிரதமர் மோடி எங்கு சென்றாலும் இதுபற்றியே பேசினார். ஆனால், ஏனோ உலகில் அசுத்த நகரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம் கிடைத்தது. மோடி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசியைக் கூட அவரால் தூய்மைப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய செங்கோட்டை விழாவில், மலையென குப்பைகள் குவிந்தது, தூய்மை இந்தியாவின் லட்சணத்தை மீண்டும் ஒருமுறை வீடியோ போட்டு காட்டியிருக்கிறது.இந்திய சுதந்திர தின விழாவையொட்டி, ஏராளமான அரசு அதிகாரிகள், வெளிநாட்டு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். ஏராளமான பள்ளிகளிலிருந்தும் குழந்தைகள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி நேரம் காலம் தெரியாமல், தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் போல 80 நிமிடம் வரை வார்த்தைகளை அள்ளிவீசி, அனைவரையும் களைப்படைய வைத்தார். குறிப்பாக குழந்தைகள் பசி, தாகம், புழுக்கம் என்று ஒரு சித்ரவதையையே அனுபவித்து விட்டனர். அவர்களின் பசிக்கு, வாழைப்பழம், நொறுக்குத் தீனிகள், குடிநீர் என்று பெற்றோர்கள் கொடுத்தும் குழந்தைகளை அமைதிப்படுத்த முடியவில்லை.

இது ஒருபுறமிருக்க, காலி குடிநீர் பாட்டில்கள், வாழைப்பழத்தோல், மிச்சமான உணவுப்பொருட்கள் மற்றும் அவை இருந்த பிளாஸ்டிக், பாலீத்தின் பைகள் இவற்றை சேகரிக்க போதுமான குப்பைத் தொட்டிகள் இல்லை. கழிவுகளை மடியில் கட்டிக்கொள்ள முடியாது என்பதால், பலரும் அவற்றை எங்கே போடுவது என்று தெரியாதவாறு, ஆங்காங்கே கீழே வீசியெறிந்தனர்.மோடியின் உரைமுடிந்து பார்த்தபோதுதான், செங்கோட்டை வளாகத்தில் இந்த குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தது தெரியவந்தது. நாட்டின் சுதந்திர தின விழாவிலேயே, தூய்மையைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள்தான் நாட்டை தூய்மை ஆக்கப் போகிறார்களா? என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அது இருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.