திருப்பூர்,
இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஐந்து இடங்களில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாக்கள் நடைபெற்றன.

திருப்பூர் தெற்கு மாநகரம் கல்லம்பாளையத்தில் புதன்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா நடைபெற்றது. தேசியக்கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கே.முத்துசாமி ஏற்றிவைத்தார். வாலிபர் சங்க வெண் கொடியை வாலிபர் சங்க கிளைச் செயலாளர் செ.தினேஷ்குமார் ஏற்றி வைத்தார். கிளை துணைச்செயலாளர் ஏ.குமார் தலைமையில் அனைவரும் மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர்.இதையடுத்து குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் டி.மணி, சிறுபான்மை மக்கள் நலக்குழு தெற்கு மாநகரச் செயலாளர் சௌந்தரபாண்டியன், ரீனா நிட்டிங் கே.ஈஸ்வரன், எம்.முருகேசன், வாலிபர் சங்க முன்னாள் தெற்கு மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கே.காமராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாநகர செயலாளர் பா.ஞானசேகர், மாநகரத் தலைவர் ந.சஞ்சீவ், பொருளாளர் நவீன் லட்சுமணன், மாதர் சங்க நிர்வாகிகள் ஷகிலா பானுமதி உள்பட பலர் பங்கேற்றனர். வானவில் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

வடக்கு மாநகரம்:
வடக்கு மாநகரம் வாலிபர் சங்க ஓடக்காடு கிளை சார்பில் 7ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா லிங்கேகவுண்டர் வீதி பகத்சிங் திடலில் நடைபெற்றது. கிளைத் தலைவர் எம்.தியாகராஜன் தலைமையில் கிளைச் செயலாளர் வி.மணிகண்டன் வரவேற்றார். தேசியக் கொடியை டிஎம்எஸ்.சுப்பிரமணி, வாலிபர் சங்கக் கொடியை கலாஸ் சங்கப் பொருளாளர் எம்.முருகேசன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதையடுத்து குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மதம் தவிர்ப்போம், மனிதம் வளர்ப்போம், ஒற்றை பூமியை பாதுகாப்போம், பெண்மையை போற்றுவோம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி, மாணவர் சங்கத்தினர் நடத்திய ‘யார் செய்த தவறு’ என்ற விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல், வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் முகிலன் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். இ.சே.பாரதி சண்முகத்தின் கங்கை கருங்குயில்கள் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாலிபர் சங்கத்தின் குமரானந்தபுரம் தெற்கு, கிழக்கு கிளைகள் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து குமரானந்தபுரம் பி.முத்துகுமாரசாமி நினைவுத் திடலில் 72ஆவது சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா மற்றும் ரத்த தானம் செய்தோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி கோலப் போட்டியைத் தொடக்கி வைத்தார். தேசிய கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், வாலிபர் சங்க வெண் கொடியை கிழக்கு கிளைத் தலைவர் ஆர்.ராகுல் ஆகியோர் ஏற்றி வைத்தனர். வாலிபர் சங்க வடக்கு மாநகரப் பொருளாளர் சி.கே.கனகராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம் தொடக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரச் செயலாளர் பி.முருகேசன், முன்னாள் முதல் மண்டலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் வாழ்த்தினர். பரிசளிப்பு விழாவிற்கு தெற்கு கிளைத் தலைவர் எம்.நவீன்குமார் தலைமை வகித்தார். ரத்த தானம் செய்தவர்களை மருத்துவர் எஸ்.செந்தில்குமரன் பாராட்டினார். தெற்கு கிளை துணைச் செயலாளர் டி.நிபின்குமார் நன்றி கூறினார்.

திருப்பூர் ஆர்.கே.ஜி. நகர், மூகாம்பிகை நகர் சந்திப்பில் வாலிபர் சங்கத்தின் கருமாரம்பாளையம் கிளை சார்பில் 8ஆவது ஆண்டு சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா நடத்தப்பட்டது. தேசிய கொடியை டி.விஜயா ஏற்றினார். வாலிபர் சங்கக் கொடியை கிளைத் தலைவர் இ.ரமேஷ் ஏற்றி வைத்தார். குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், இளைஞர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் பி.முருகேசன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர். அதேபோல் திருப்பூர் எஸ்.வி. காலனியிலும் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.ஊத்துக்குளி பாப்பம்பாளையம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 72 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாப்பம்பாளையம் கிளை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.