திருப்பூர்,
உடுமலை அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெற்றதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை அருகே குரல்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டிணம், கண்ணமநாயக்கனூர், ஆண்டிக்கவுண்டனூர், உரல்பட்டி உள்பட 11 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 51 பேர் உறுப்பினராக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 30–ஆம் தேதி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ள நிலையில் 37 வேட்பாளர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மீண்டும் தேர்தல் நடைபெறும் என போட்டியிட்டோர் எதிர்பார்த்தனர். ஆனால் 11 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறி 11 நிர்வாகிகள் தேர்வு பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடியாகும்.

இந்த முறைகேடு குறித்து மாவட்ட துணைப்பதிவாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேட்டைக் கண்டித்து குரல்குட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டுறவு சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தனர். அதன்படி கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை காவலர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் குரல்குட்டை கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை ஏற்றார். இதில் ஒன்றியக்குழுச் செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலதண்டபாணி, ஜெகதீசன், ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டுறவு முறைகேட்டைக் கண்டித்து பேசியதுடன், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லையென்று இரவோடு இரவாக காவல்துறையினர் வீட்டுக்கதவில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றது ஜனநாயக விரோதமான செயல் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.