மேட்டுப்பாளையம்,
கனமழையால் பவானியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் பயணத்தை மேற்கொண்டு வருவதால் அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.

தமிழக – கேரள எல்லையோரத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக் காடுகள் மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து அதன்நீர்வரத்தான வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.ஏற்கனவே தொடர் மழை காரணமாக வேகமெடுத்து ஓடி வந்த பவானியாற்றில் பில்லூர் அணையின் உபரிநீரும் திறந்து விடப்பட்டதால் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்து சுமார் ஒன்பதாயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய விளை நிலங்கள், வாழைத் தோட்டங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் என அனைத்தும் நீரில் மூழ்கின. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலைகள், தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காந்தவயல் பகுதியில் இருபதடி உயரம் கொண்ட உயர்மட்ட பாலம் மூழ்கி பத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கும் நிலையில் இப்பகுதியில் உள்ள சாலைகளும் பல இடங்களில் நீருக்கடியில் சென்று விட்டதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் ஆற்றைக் கடந்து நகர் பகுதிக்கு வர பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மூங்கில் மற்றும் தார்ப்பாயினால் செய்யப்பட்ட பரிசல்களில் கிராமமக்கள் மட்டுமின்றி அவர்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் விவசாயவிளை பொருட்களும் வேறு வழியின்றி ஏற்றி இக்கரைக்கு வருவதால் அவை ஓட்டை விழுந்து பரிசலின் உள்ளே தண்ணீர் கசிந்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறை ஆற்றை கடக்கும் போதும் பரிசலின் உள்ளே தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் கசியும் பரிசல்களில் பாய்ந்தோடும் ஆற்றில் அபாயகரமான முறையில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினசரி காலை, மாலை என இருமுறை இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, இவர்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக ஃபைபரினாலான பரிசல்களையோ அல்லது பிளாஸ்டிக் போட் போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. மேலும், மலைக்கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த நீரை பருகவும் குளிக்கவும் காட்டு யானைகள் வருவதால் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக உள்ளதாக கிராமமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.