மத்திய அரசின் நலக்காப்பீட்டுத் திட்டம் குறித்துமிகப் பெரிய பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 135 கோடி இந்திய மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாதபோதும், காப்பீடு அளித்துவிட்டால் அனைவருக்கும் சிகிச்சை அளித்துவிடலாம் என்பது போன்ற பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது.1000 மக்கள் தொகைக்கு எவ்வளவு மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளன என்பது, மருத்துவ வசதி வளர்ச்சியின் குறியீடாகக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, 1000 பேர்உள்ள ஊரில், திடீரென்று பரவலான நோய் ஏற்படும்போது எவ்வளவு பேரை உள் நோயாளிகளாக ஒரே நேரத்தில் சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடியும் என்பதேஇந்த விகிதம் உணர்த்தும் செய்தி.இந்தியாவில் 1000 பேருக்கு முக்கால் (0.7) படுக்கைகள் மட்டுமே உள்ளன. சோமாலியாவில்கூட 1000 பேருக்கு 8.7 படுக்கைகள் உள்ளன என்பதிலிருந்து இந்தியாவில் மருத்துவ வசதிகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.2017இல் மோடி அரசு வெளியிட்ட தேசிய நலக்கொள்கைகூட, 1000 பேருக்கு 2 படுக்கைகள் என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதை நோக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், நலக்காப்பீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைவருக்கும் சிகிச்சை கிடைத்துவிடும் என்பதான தோற்றம்ஏற்படுத்தப்படுகிறது. சிகிச்சையளிக்கப் படுக்கைகளே இல்லாத நிலையில், காப்பீட்டை வைத்துக்கொண்டு என்னசெய்ய முடியும்? தனியார் மருத்துவமனைகளில் மிக அதிகக் கட்டணம் செலுத்திச் சிகிச்சை பெற முடியாத நிலைக்கு நிவாரணமாக மட்டுமே காப்பீடு இருக்க முடியும்.ஆனால், அதே சிகிச்சைகளை, கட்டணமே இன்றியோ,மிகக் குறைந்த கட்டணத்திலோ அரசு மருத்துவமனைகள் சிறப்பாகச் செய்து வருகின்றன எனும்போது, கூடுதலாக அரசு மருத்துவமனைகளை உருவாக்குவதும், இருக்கிற மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்துவதுமே இப்போது தேவையான நடவடிக்கைகள்.

பல கோடிகளைச் சுருட்டத் தயாராகும் பாஜக

உண்மையில் மேற்குறிப்பிட்ட படுக்கை எண்ணிக்கையிலும் பெரும்பகுதியானவை நகர்ப்புறங்களிலேயே உள்ளன. கிராமப்புறங்களுக்கு என்று தனியாகக் கணக்கிட்டால், இதிலும் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும். ஊரில்மருத்துவமனையே இல்லாத மக்கள், ரூ.5 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது?ஆனால், இத்தகைய உண்மைகள் எதையும் பொருட்படுத்தாமல், உலகின் மிகப்பெரிய நலக் காப்பீட்டுத்திட்டம், அது, இது என்று அள்ளிவிட்டுக்கொண்டு, திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. இத்திட்டத்தில் பலன் பெறுவதற்கான தகுதி உடையவையாக 10.74 கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரிபார்க்கும் பணியில் தேசிய நல முகமை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த 10.74கோடி குடும்பங்களில் 65 லட்சம் குடும்பங்கள் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக, ஆயுஷ்மான் பாரத் தேசிய நலப் பாதுகாப்புப் பணி என்று பெயரிடப்பட்டுள்ள மோடி கேர் திட்டத்தின் தலைமை செயல் அலுவலரான இந்து பூஷன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது, திட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஊழல் தொடங்கி விட்டது. இந்த போலியான குடும்பங்களில் 70 சதவீதம், பாஜகஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பாகப் பலகோடியை மாற்றியதுபோன்ற ஓர் ஊழலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயிர்க்காப்பீட்டுத் திட்டமும், விவசாயிகளுக்கு சர்வரோக நிவாரணி என்பது போன்ற, மோடியின் பெருமை பொங்கும் பேச்சுகளுடன்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை யாரும்மறந்திருக்க முடியாது. ஆனால், இன்றுவரை விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்பதுடன், விவசாயிகளின் நிலையில் சிறு முன்னேற்றத்தைக்கூட அத்திட்டம்கொண்டுவரவில்லை என்பதை யாருமே மறுக்கமுடியவில்லை. அதனால்தான், விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளி விபரங்களைக்கூட மோடி அரசால் 2015க்குப்பின் வெளியிட முடியவில்லை.

விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை

கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவெனில், ஏற்கெனவே இருந்த பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்து, புதிய திட்டம் என்பதுபோன்ற தோற்றத்துடன் பிரதான் மந்திரி ஃபசல் பீமயோஜனா என்ற பெயரில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தபோது, விவசாயக்காப்பீட்டு நிறுவனத்தைத் தவிர்த்து, பொதுத்துறைப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. தனியார்க் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னரே பொதுத்துறை நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன என்பதுடன் பெரும்பகுதி வணிகம் தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயிர்க்காப்பீடு முதன்முறையாக 1972-73இல்எல்ஐசி நிறுவனத்தின் பொதுக்காப்பீட்டுத் துறையால் வழங்கப்பட்டது. அப்போது, தனித்தனியாகக் காப்பீடுவழங்கப்பட்ட நிலையில், 1985இல் நாடு முழுமைக்குமான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அப்போதிலிருந்து, மாற்றங்களுடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் பங்கேற்பின்மையே அத்திட்டத்தின் குறைகளுக்குக் காரணம் என்று கூறித்தான்மோடி புதிய திட்டத்தை அறிவித்தார். அதனாலேயே தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் பலன்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

நாடுமுழுவதும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராடிவருகின்றனர். இத்திட்டத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. இழப்பீடு வழங்கப்பட்ட விபரங்கள்கூட வெளியிடப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குக்கூட அரைகுறையாகவே பதில்கள்அளிக்கப்படுகின்றன. இத்திட்டம் தனியார்க் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் உதவியாக இருந்துள்ளது என்பதை வெளியாகியிருக்கிற செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, 2016-17இல் இத்திட்டத்தின்கீழ் வசூலிக்கப்பட்ட பிரிமியம் ரூ.22,437 கோடி. ஆனால், 2017 ஜூலை 25 வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ரூ.8,087.23 கோடிமட்டுமே. தனியார் பங்கேற்பு இல்லாத காலத்தில், 1998-2015 வரை வசூலிக்கப்பட்ட மொத்த பிரிமியம் ரூ.28,579.66 கோடி. ஆனால், அக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ரூ. 50,830.26 கோடி. மோடியின் பயிர்க்காப்பீடு யாருக்கு உதவுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.இத்திட்டம் விவசாயிகளுக்கு உதவியாக இல்லாததால், பீகார், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தாங்களே தனி பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.மோடி அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் குறைபாடுகள், மாநிலங்களையே தனி திட்டம் தொடங்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிற அதே வேளையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கெனவே மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிற நலக் காப்பீட்டுத் திட்டங்களையும், மத்திய அரசின் புதிய திட்டத்துடன் இணைக்க மறைமுக வற்புறுத்தல்கள் தரப்பட்டுவருகின்றன. பயிர்க்காப்பீட்டின் நிலையை மோசமாக்கியதுபோன்று, ஏற்கெனவே மாநிலங்கள் நடத்தி வருகிற நலக்காப்பீட்டுத் திட்டங்களையும் சீரழிப்பதுதான் புதிய திட்டத்தின் பலனாக இருக்கும் என்பதைத்தான், தொடங்கும்போதே வெளியாகியுள்ள இந்த ஊழல் உணர்த்துகிறது.

ரூ.80 ஆயிரம் கோடி ஏழைப் பணம்

அனைத்து மக்களுக்கும் வங்கிச்சேவைகளை வழங்குவதாகக்கூறி மோடி தொடங்கிய ஜன் தன் யோஜனா திட்டத்தில் இதுவரை 32.25 கோடிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதாக மோடி பெருமைபொங்கக் கூறிக்கொண்டாலும், இந்தக் கணக்குகளில் ரூ.80,674.82 கோடியை, மோடி குறிப்பிடுகிற ஏழை மக்கள் செலுத்தியுள்ளனர். அதே நேரத்தில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு மல்லையா உள்ளிட்ட பெருவணிகர்கள் செலுத்த வேண்டிய வராக்கடன் உயர்ந்துள்ளது. அதாவது, ஏழை மக்களின் பணத்தை, தேன் தடவிய சொற்களால் கவர்ந்து, முதலாளிகளுக்கு வாரி வழங்கி வருகிறதுமோடி அரசு. அது போதாதென்று, கணக்கில் பணம்வைத்துக்கொள்ளவே முடியாத ஏழைகளிடம், குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்று, வரலாறு காணாத அளவாக ரூ.5 ஆயிரம் கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும், மோடி என்ன பெயரில், யாருக்காக என்று கூறி, எந்தத் திட்டம் அறிவித்தாலும், அது மக்களிடமிருந்து பறித்து, பெருமுதலாளிகளுக்கு வழங்குவதாகவே இருக்கும் என்பதையே உணர்த்துகின்றன.அந்த வகையில், ஆயுஷ்மான் பாரத்தும் தனியார் மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே அன்றி, நிச்சயம் மக்களுக்காக அல்ல. அதனால்தான்,இல்லாத குடும்பங்கள் சேர்க்கப்பட்டு, அவற்றுக்கும் சேர்த்துப் பிரிமியம் கணக்கிடப்பட்டு, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.

மோடி அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் குறைபாடுகள், மாநிலங்களையே தனி திட்டம் தொடங்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிற அதே வேளையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கெனவே மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிற நலக் காப்பீட்டுத் திட்டங்களையும், மத்திய அரசின் புதிய திட்டத்துடன் இணைக்க மறைமுக வற்புறுத்தல்கள் தரப்பட்டுவருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: