தோல்விக்கு உள்ளாக்கும் நமது கல்வி முறையில் அடிப்படையான மாற்றம் அவசயம் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமுஎகச வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் தோழர் இரமேஷ்பாபு கீதா தம்பதியினரின் மூத்த மகன் சூர்யா என்ற சூர்யகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் +1 தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டான் என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.

+1ல் ஏற்பட்ட தனது மகனின் தோல்வியை தொடர்ந்து அறிவியல் இயக்கத் தோழர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மறு தேர்விலும் தோல்வியடைந்தான், அதை பெற்றோரிடம் எப்படிச் சொல்வது என்கிற மன உளைச்சலில் அதிகாலை மூன்றரை மணிவாக்கில் கடலூரை கடந்து சென்ற அந்தியோத்யா இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

கல்வி விஷயத்தில் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்த சூர்யாவை போன்ற மாணவனையே தற்கொலை நோக்கி நமது கல்வி முறை தள்ளுகிறது என்றால், மற்ற குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் மன உளைச்சல் குறித்து எண்ணிப்பார்க்கவே முடிவதில்லை.

தோல்விக்கு உள்ளாக்குகிற நமது கல்வி முறையில் அடிப்படையான மாற்றத்தை உடனடியாக கொண்டுவரவேண்டிய தேவையை சூர்யாவின் மரணம் நமக்கு மீண்டும் வலியுறுத்துகிறது.  அன்பு மகனை இழந்து வாடும் தோழர்கள் இரமேஷ்பாபு-கீதாவுக்கு தமுஎகச தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: