சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையிலுள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

இந்த ஏரி, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கல்லணை, கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27 ஆம் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கடந்த 11 ஆம் தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. படிப்படியாக அதிகரித்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 570 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் வாலஜா ஏரியில் இருந்து 420 கனஅடி தண்ணீர் பெருமாள் ஏரிக்கு அனுப்பப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கிளை வாய்க்கால்களை விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த உடன்வரும் 25 ஆம் தேதிக்குள் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.