வேலூர்,
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் நிதி உதவியுடன் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் விஐடி பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருகட்டமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஏற்படும் மாசு, வேளாண் உற்பத்தி பாதிப்புகள், மண்அரிப்பு உள்ளிட்டவற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சியை நாட்டில் முதன்முதலாக விஐடி பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.  விஐடி உயிர்தொழில்நுட்ப பள்ளி, கட்டுமானப் பொறியியல் பள்ளி, வயல் எனப்படும் விஐடி வேளாண் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து வாலாஜாபேட்டை வட்டம் புலியந்தாங்கல் ஏரியில் இதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளன. புலியந்தாங்கல் ஏரி பகுதியில் அமைந்துள்ள 40-க்கும் மேற்பட்ட தோல், ரசாயன தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் ஏரியில் கலந்து மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் ஏரியைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடவு செய்து அதன் வளர்ச்சி மூலமாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளன.  முதல்கட்டமாக, பென்டோபோரம், குல்முகல், அல்பீசியா, காட்டுவா, சவுக்கு உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. அடுத்த 6 மாதங்களில் மேலும் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வெங்கடாசலம் மரக்கன்று நடும் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

விஐடி கட்டுமானப் பொறியியல் பள்ளி முதல்வர் எஸ்.கே.சேகர்,விஐடி வயல்இயக்குநர் பாபு, உயிரி அறிவியல் தொழில்நுட்ப பள்ளி முதல்வர் கோதண்டன் மேற்பார்வையில் பேராசிரியர்கள் ஆர்.வித்யா, பாஸ்கரன் ஆகியோர் ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நடவு செய்யப்படும் மரக்கன்றுகளின் வளர்ச்சி, அவை உறிஞ்சும் ரசாயனக்கழிவுகளின் அளவு, மாசடைவதைத் தடுக்கும் வகையில் எந்த மரக்கன்று அதிகப்படியான ரசாயன கழிவை உறிஞ்சும் தன்மையுடையவை என்பதைக் கண்டறிந்து அந்த மரக்கன்றுகள் அதிகப்படியாக நடும் வகையில் தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆராய்ச்சியின் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: