போபால்;
மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இப்போதே சாமியார்கள் பலர் போட்டியில் குதித்துள்ளனர்.முதலில் பாஜக-விடம் ‘சீட்’ கேட்டுப் பார்ப்பது, அக்கட்சி இடம் ஒதுக்காத பட்சத்தில் தனியாகவோ, அல்லது பாஜக-வைப் பழிவாங்கும் வகையில் காங்கிரஸ் சார்பிலேயேகூட போட்டியிடுவது அந்த சாமியார்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி உள்ளது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவி வகிக்கிறார். இங்கு 2018 இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலமாக பாஜக செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஆனால், இந்தமுறை முடிவுகள் மாறும். பாஜக தோற்கும் என்று கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடைப்பெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றதும்கூட அதையே உறுதிப்படுத்துகின்றன.மத்தியப்பிரதேசத்தில் பாஜக-வின் செல்வாக்கிற்கு சாமியார்களின் ஆதரவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. சாமியார்கள் – பாஜக இடையே விரிசல் அதிகமாகி வருகிறது.

நர்மதா நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நட்டதில் ஊழல், மணல் கொள்ளை நடந்திருப்பதாக சாமியார்கள்கள்தான் சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு வைத்தனர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக பேரணியையும் அறிவித்தனர்.
இவர்களில் முக்கியமானவர் சுவாமி நாம்தேவ் தியாகி. இவருக்கு இன்னொரு பெயர் ‘கம்ப்யூட்டர் பாபா’. இவர், பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததும், சவுகான் பதறிப்போனார். அவரைச் சாந்தப்படுத்தும் விதமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘தியாகி’ மட்டுமன்றி, அவருடன் சேர்த்து 5 சாமியார்களுக்கு மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தை சவுகான் வழங்கினார். இவர்களே நர்மதா திட்டத்தை மேற்பார்வை செய்வார்கள் என்றும் அறிவித்தார். பதவி என்றதும் சாமியார்கள் போராட்டத்தைக் கைவிட்டு பதுங்கினர்.

ஆனால், 5 சாமியர்களுக்கு மட்டும் அமைச்சர் அந்தஸ்து வழங்கியது மற்ற சாமியார்களை பொறாமையில் தள்ளிவிட்டது. தங்களுக்கும் அந்தஸ்து, அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தற்போது வரை பாஜக-வை குடைந்தெடுத்து வருகின்றனர்.இதனிடையே, புதிய பிரச்சனையாக, அமைச்சர் அந்தஸ்தைப் பெற்ற சாமியார்களும் திருப்தி அடையவில்லை என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. தங்களுக்கு அமைச்சர் பதவி முறைப்படி வேண்டும்; அதாவது தங்களை எம்எல்ஏ-வாக்கி, அமைச்சராக்கினால்தான் முழுமையான அந்தஸ்து கிடைக்கும் என்று கருதுகின்றனர்.

‘கம்ப்யூட்டர் பாபா’ நாம்தேவ் தியாகி-தான், இதையும் துவங்கி வைத்துள்ளார். வரவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதாக, முண்டா தட்டியுள்ள தியாகி, சவுகான் கேட்டுக் கொண்டால் இந்தூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று ‘பொடி’ வைத்துள்ளார்.

இதேபோல, பாபா அவ்தேஷ்புரி (47), உஜ்ஜைனி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதி தனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். தொகுதிக்காக பாஜக.வை நிர்ப்பந்தமெல்லாம் செய்யமாட்டேன்; ஆனால், ‘சீட் தராவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன்’ என்று ஆவேசம் அடைந்துள்ளார்.

இதேபோல மகராஜ் மதன் மோகன் கதேஸ்வரி (45), சியோனி மாவட்டத்தில் உள்ள கியோலரி தொகுதியிலும், யோகி ரவிநாத் மகிவாலே (42), ரெய்சென் மாவட்டத்திலுள்ள தொகுதியிலும் போட்டியிட விரும்புகின்றனர்.

இவர்களில் ரவிநாத் மகிவாலே, ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தையே துவங்கி விட்டார். “வருவது வரட்டும். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது மட்டும் உறுதி. பாஜக சீட் தராவிட்டால் என்ன, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதிலும் எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.ரெய்சென் தொகுதியில் போட்டியிட விரும்பும் மகந்த் பிரதாப் கிரி (35)-யும் பாஜக சார்பில் சீட் தராவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.
இதேபோல வேறுசில சாமியார்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பார்த்துக் கொள்ளலாம் என்று சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக விதைத்த வினை, தற்போது அக்கட்சிக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரியத் துவங்கி விட்டன என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

You must be logged in to post a comment.